பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது: நாளை காலை முதல் பேருந்துகள் இயங்கும் | TN government transport corporation called-off strike

வெளியிடப்பட்ட நேரம்: 22:48 (11/01/2018)

கடைசி தொடர்பு:07:23 (12/01/2018)

பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது: நாளை காலை முதல் பேருந்துகள் இயங்கும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்துவந்தனர். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

பேருந்து நிலையம்

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கலாம். இந்த நேரத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 2.44 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. 0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்னையாக இருந்துவருகிறது. அரசு உடனடியாக 2.44 காரணி ஊதிய உயர்வை அமல்படுத்தட்டும். இன்றிலிருந்து பேருந்துகளை இயக்குங்கள். பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பேருந்துகள் இயங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்’ என்று தெரிவித்தது. உயர் நீதிமன்றம் இவ்வாறு கருத்துத் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், நாளை காலை முதல் பேருந்துகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. `பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் நாளை காலை பணிக்கு திரும்புவார்கள்' எனவும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.