த.மா.க இளைஞரணி சார்பாக 11 மாவட்டங்களில் இலவச மினி பேருந்து!

ஒரு அரசியல் கட்சி என்பது மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் போக்குவரத்து நிறுத்தம் 8 நாள்கள் நடந்தன. இதனால் நகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், மக்களின் இன்னல்களை உணர்ந்து தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணி சார்பாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இலவச மினி பேருந்துகளை இயக்கினார்கள். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதுப்பற்றி தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணி  மாநிலத் தலைவர் யுவராஜா, ''தமிழர்களின் மிக முக்கிய திருநாளாக பொங்கலைக் கொண்டாடி வருகிறோம். இந்தச் சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆளும் கட்சியினர் செவி கொடுத்து கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்த்திருக்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் கையாளாகாத தனத்தாலும், அலட்ச்சியப் போக்காலும் மக்கள்மீது அக்கறை இல்லாததாலும் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மக்கள் பேருந்து நிலையங்களில் துயரப்படும் காட்சிகளைப் பார்த்தோம். இந்த ஆளுமை திறன் அற்ற ஆட்சியாளர்களால் மக்களுக்கு தீர்வு ஏற்படுத்த மாட்டார்கள் என்று உணர்ந்து எங்கள் தலைவர் வாசனிடம் சொல்லி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி முடிவெடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச மினி பேருந்துகள் இயக்க முடிவெடுத்தோம். அதையடுத்து ஊட்டி, ஈரோடு, ராமநாதபுரம், திருவள்ளூர், நாமக்கல், சிவகங்கை, மதுரை மேலூர், ஒட்டன் சத்திரம் என 11 இடங்களில் இலவச பேருந்துகளை இயக்கி வருகிறோம். பிற  மாவட்டங்களிலும் இயக்க முயற்சித்தோம்.

ஈரோட்டில் டு சித்தோடு, ஈரோடு டூ திண்டல், ஈரோடு டூ பவானி, ஈரோடு டூ சூரம்பட்டி என ஈரோட்டில் 4 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. 3 நிமிடத்தில் ஒரு பேருந்தில் மக்கள் நிரம்பி விடுகிறார்கள். ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அவர்கள் செல்லும் இடத்தில் இறங்கி விடுகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை மதிக்கிறோம். ஆனால், தொழிலாளர்களையும், மக்களையும் அலட்சியப்படுத்தும் இந்த ஆட்சியில் மக்கள் படும் அவலத்தைப் போக்குவதற்கு மட்டுமே பேருந்துகளை இயக்கி வருகிறோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் கொடுத்த பணம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி போராடிக் கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் வெட்கக் கேடு'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!