ஆக்கிரமிப்பு காரணமாக மறு குடியமர்த்தப்பட்டவர்களுக்கு வேலை... காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆணை!

சென்னை கூவம் ஆற்றங்கரை ஓரத்திலும், காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைப்பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அங்கிருந்து அகற்றி நாவலூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. மேலும், அவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றும் வகையில் அப்பகுதியில் மறுகுடிபெயர்ந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் பதினோரு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமில் கலந்துகொண்ட 700 பேரில், 167 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 90 பேர் திறன் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு மறு குடியமர்த்துதல்

அப்போது பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, `நாவலூரில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இப்பகுதியில் அடிக்கடி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இங்கு வசிப்பவர்களுக்கு பேருந்து வசதி, தெருவிளக்கு வசதி, குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும். சென்னை கூவம் ஆற்றின் கரையோரம் வசித்த 805 குடும்பங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 900 குடும்பங்கள், ஏற்கெனவே குடியிருக்கும் 35 குடும்பங்கள் என 1740 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்துவருகிறார்கள். இதில் பத்தாவது முதல் பட்டப்படிப்பு வரை 1160 இளைஞர்கள் கல்வி பயின்றிருப்பவர்கள் என தெரியவருகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் கட்டுமானப்பணி, அலுவலகப் பணியாளர்கள் என அவரவர் தகுதிக்கேற்றாற் போல வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!