வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:37 (12/01/2018)

பல்லாங்குழி சாலை; கண்டுகொள்ளாத நிர்வாகம்... களம் இறங்கிய இளைஞர்கள்!

மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் கடந்த 10 அண்டுகளுக்கு மேலாக பல்லாங்குழி சாலையாக கிடக்கும் பிரதான சாலையை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இளைஞர்கள் களத்தில் இறங்கி சீரமைத்தனர்.

பல்லாங்குழி சாலையை சீரமைத்த இளைஞர்கள்
 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குமரையா கோயில், மகாசக்தி நகர் மற்றும் ஜோதிநகர். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து ராமநாதபுரத்தின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்ல குமரையா கோயில் - மகாசக்தி நகர் இடையேயான பிரதான சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் பயன்படுத்தி வரும் இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் இந்தச் சாலையில் உள்ள குழிகளில் தேங்கும் மழை நீரால் போக்குவரத்து தடை ஏற்படும் நிலைக்கு தள்ளப்படும். இந்த சாலையின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் தொடங்கி பஞ்சாயத்து நிர்வாகம் வரை கடந்த 10 ஆண்டுகளாக புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களின் உதவியுடன் பல்லாங்குழியாக காட்சியளிக்கும் இந்த சாலையை தாங்களே முன் வந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு தற்காலிகமாக சரி செய்தனர். இதன் பின்னராவது இந்த சாலையினை நிரந்தரமாக சீரமைக்க அரசு நிர்வாகம் முன் வர வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.