வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:34 (12/01/2018)

திருப்பூர் குமரன் நினைவு தினத்தை அனுசரிக்காத அரசு நிர்வாகம்... பொதுமக்கள் வேதனை

இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய தியாகி, கொடிகாத்த குமரனின் 86-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்டத்தின்போது காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, 1932-ம் ஆண்டு ஜனவரி 10- ம் தேதி, திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில், பிரிட்டிஷ் காவல்துறையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டபோதும், தேசியக் கொடியை கீழே விட்டுவிடாமல், கொடிகாத்த குமரனாய் உயிர்நீத்தவர் அவர்.

எனவே, அவர் மறைந்த தினமான நேற்று, அவருடைய நினைவகத்தில் 86-வது நினைவு தினத்தை பல்வேறு பொதுமக்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ மாணவியர் என பலரும் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
குமரனின் நினைவு ஸ்தூபி சுத்தம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த வருடம் திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு இருந்தது. ஆனால், நேற்றைய தினம் அப்படி எந்தவொரு மரியாதையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை. இது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்தபோது, `திருப்பூர் குமரனின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், அவரது நினைவு தினத்தை அரசு சார்பாக அனுசரிப்பது குறித்த எந்த அரசாணையும் வரவில்லை' என்று முடித்துக்கொண்டனர்.