வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:32 (12/01/2018)

நகராட்சி ஆணையரை கண்டித்து காத்திருப்புப் போராட்டம்..!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த காத்திருப்புப்  போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு முயன்றதால், அவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட நபர்கள் பேசியபோது, " உடுமலை நகராட்சி ஆணையர் தொடர்ந்து தன்னிச்சைபோக்குடன் செயல்பட்டு வருகிறார். நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவை அமல்படுத்தாமல், தொடர்ந்து ஊழியர் விரோதப்போக்கை மேற்கொள்ளும் உடுமலை நகராட்சி ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், எங்களது சங்கத்தின் நிர்வாகியான செல்வக்குமார் என்பவரை பழிவாங்கும் வகையில், அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி நீக்க ஆணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மற்றும் துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் என்பவருக்கு முறையான ஊதியம் வழங்கி உடுமலைப்பேட்டை நகராட்சியில் பணியாற்றிட உரிய அனுமதியை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்" என்றனர்.

இன்றைய போராட்டத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தைக் கட்டுப்படுத்த, அப்பகுதியில் காவல்துறையினர் அதிகம் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், இருதரப்பையும் சமாதானப்படுத்தி, காவல்துறையினர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.