வெளியிடப்பட்ட நேரம்: 03:38 (12/01/2018)

கடைசி தொடர்பு:07:16 (12/01/2018)

`தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் 80,000 ரூபாய் கடன் சுமை!' - மு.க.ஸ்டாலினின் கணக்கு

சட்டப்பேரவையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைகுறித்து தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், `தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் 80,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது இந்த அரசு' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

ஸ்டாலின்

இதுகுறித்து ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ பேஸ்புக்கில், `இன்று (11-01-2018) சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு என்னுடைய கருத்துகளை எடுத்து வைத்தேன். முன்னதாக, கேள்வி நேரம் முடிந்தவுடன் வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினேன்.

பின்னர் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில், ஆளுநர் உரை என்பது ‘Statement of Policy’ அதாவது, கொள்கை அறிவிப்பாக அமைந்திட வேண்டும் என்பது அதனுடைய இலக்கணம். அந்த அடிப்படை இலக்கணத்தை அனுசரித்து 2018-ம் ஆண்டுக்கான ஆளுநர் உரை அமையாதது உள்ளபடியே பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது என்றேன்.

அதேபோல, ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கும், மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் இந்த அரசு தெரிவித்துக்கொண்டுள்ள நன்றிதான், பல இடங்களில் திரும்பத் திரும்ப இருக்கின்றது. மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறார்கள் என வெளிப்படையாக இந்த அரசின் சார்பில் ஒப்புகொண்டு இருக்கிறார்கள். இத்தனை நன்றிகளை தெரிவித்திருக்கும் இந்த அரசு, தமிழக மக்களின் நலனுக்காக எதையாவது சாதிக்க முடிந்திருக்கிறதா என்று, ஆளுநர் உரையில் தேடிப் பார்த்தேன்.

குறிப்பாக, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் கேட்ட ரூ. 25,912 கோடிநிதி,

வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ. 22,573 கோடி மத்திய அரசிடம் கேட்ட நிதி,

வறட்சி நிவாரணத்துக்காக ரூ.39,565 கோடி நிதியுதவி,

14-வது மத்திய நிதியாணையத்தின் இழப்புகளுக்காக, 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி,

அதுமட்டுமல்ல, கடந்தமுறை ஆளுநர் உரையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு பாதிப்புகள் நாட்டில் உருவானபோது, மத்திய அரசு மான்யத்தில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு 90 சதவிகித நிதியளிக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன், இடம்பெறவில்லை.

அதேபோல, ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் திட்டம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் என எதிலாவது மத்திய அரசு மாநில அரசுக்கு துணை நின்று இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை

மாநில அரசு கேட்ட எதையுமே மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதை இந்த ஆளுநர் உரையின் மூலம் உணர முடிகிறது என்றேன்.

பின்னர், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் அங்கம் வகித்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக செய்த சாதனைகளில், சிலவற்றை அவையில் பதிவு செய்தேன்.

ஆளுநர் உரை என்பது ஏதோ ஒரு மரபு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அரசின் கொள்கை முடிவுகளை மக்களுக்கு அறிவிக்கின்ற மிகப்பெரிய சாசனம். குறிக்கோளுடன் செயல்படும் எந்தவொரு அரசும் கொள்கை முடிவுகளை ஆளுநர் உரையில் தெளிவாக தெரிவிப்பது வழக்கம். ஆனால், கடந்த 3 ஆளுநர் உரைகளை ஒன்று சேர வைத்துப் பார்க்கின்றபோது குறிக்கோள் இருப்பதைவிட ஏராளமான இடைவெளிகள் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. குறிக்கோள் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது என்ற அடிப்படையில்தான் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.

அதேநேரத்தில் இந்த ஆளுநர் உரையில் இன்னோரு வினோதத்தைப் பார்க்க முடிகிறது. ஆளுநர் உரையின் பக்கம் 4-ல் முதல் மற்றும் இரண்டாவது வரிகளில் நிதி மேலாண்மையில் தமிழ்நாடு அரசு மிகப் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதே பக்கத்தில் 14-வது வரியில் ‘கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது’ என்று உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல, 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் கடன் இருக்கிறது என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் 80,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த பேராபத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதைப் பற்றி எந்தவித கொள்கை அறிவிப்பும் இந்த ஆளுநர் உரையில் இல்லை என்பது வேதனைக்குரியது.

இறுதியாக, இந்த ஆளுநர் உரை வார்த்தை ஜாலத்தால் ஏதோ இருப்பதைப்போல் தோன்றினாலும் எதுவும் இல்லை என்பதே முடிவாக இருக்கிறது. அதிகரித்து வரும் கடன் சுமை, பெருகி வரும் வட்டி ஆகியவற்றின் காரணமாக பூஜ்யமாகி வரும் பொருளாதாரத்தில் நடக்கும் ராஜ்யத்துக்குப் பொருத்தமான காகிதப் பூவாக இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது என்றேன்.