வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (12/01/2018)

கடைசி தொடர்பு:08:20 (12/01/2018)

அரசு தொடக்கப் பள்ளி நடத்திய சமத்துவப் பொங்கல் விழா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக ஓர் அரசு தொடக்கப் பள்ளி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி அசத்தியிருக்கிறது. 
 சரசரக்கும் பட்டுச்சேலை அணிந்து, கம்பீரமாக வேட்டிக் கட்டி அந்தக் குட்டிப் பாப்பாக்களும் தம்பிகளும் தங்கள் ஊரின் தெருக்கள் வழியே நடந்து, தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்றபோது, எதிர்ப்பட்ட  அப்பத்தாக்களும் அம்மத்தாக்களும் தாத்தாக்களும்  கன்னத்தில் கைவைத்து வியந்தார்கள். அவர்கள் எல்லோரும் வழிமறித்துக் கேட்டக் கேள்விகளுக்கு, ' ஸ்கூல்ல இன்னிக்கு பொங்கல் விழா கொண்டாடுறோம். அதான் புடவை கட்டிருக்கோம்’ என்றார்கள் அந்தப் பட்டாம்பூச்சிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் இருக்கிறது உருவம்பட்டி கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மொத்தமே 54 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஈராசிரியர் பள்ளி இது. ஆனாலும் குறைவொன்றுமில்லாமல் மாணவ, மாணவிகளே பொங்கல் பண்டிகையை நடத்தி அசத்தினார்கள்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 மாணவர்களும் 11 மாணவிகளும் பொங்கல் வைப்பதற்குத் தேவையான  வெண்கலப் பொங்கல் பானை, கரண்டி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, நெய், கரும்பு போன்ற பொங்கல்  உள்ளிட்ட பொருள்களுடன்  வந்திருந்தனர். அந்த மாணவிகளே கோலம் போட்டனர். அடுத்த ஆச்சர்ய நிகழ்வாக அந்த பிள்ளைகளே முன்நின்று  பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கும் போது குலவை இட்டனர். ஆசிரியர்கள் கரும்புகளை முக்கோண வடிவில் அமைத்துத் தந்தனர். அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து அந்த சின்னஞ்சிறுசுகள்  கும்மியடித்து சுற்றிவந்து பாரதியார் பாடல் ஒன்றைப் பாடியது கொள்ளை அழகு. 

அதன்பிறகு மாணவர்கள், மாணவிகள் ஒருவருக்கொருவர் பொங்கலை பகிர்ந்து கொடுத்தனர். எல்லோரும்  சாப்பிட்டு முடித்ததும் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானது. ஊசியில் நூல் கோத்தல், சாக்கு ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமையைப் நிரூபித்தனர். நிறைவாக மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐந்தாம் வகுப்பு, மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர். நாம் ஆசிரியர் முனியசாமியிடம் பேசினோம். "புதன் கிழமை அன்று மாணவ, மாணவிகளிடம் 'வருகிற வெள்ளிக்கிழமை நமது பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடுகிறோம். பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் ஒவ்வொருத்தர் வீட்டிலிருந்தும் வாங்கிட்டு வாங்க. வேட்டி சேலை அணிந்துகொண்டு வாங்க'னு சொல்லிட்டேன். ஆனால், அரசு அன்னிக்கு சிறப்பு விடுமுறை விட்டுடுச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு மறுநாள் பள்ளிக்கு வந்தேன்.

பிள்ளைகளும் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆர்வமா இருந்தாங்க. இன்னிக்கே பொங்கலை கொண்டாடுவோம். தயாரானு நான் கேட்டதும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் உற்சாகமாக  முன் வந்தாங்க. எல்லோருமே உள்ளூர் என்பதால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பிள்ளைகள் பக்காவா ரெடியாகி வந்தாங்க. விழாவை நிறைவா நடத்திக் காட்டிட்டாங்க.பொதுவாகவே, இதுபோன்ற விழாக்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில்தான் கொண்டாடுவது வழக்கம். ஆனால், முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திலேயே ஒரு அரசுத் தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடுவது இதுதான் முதல்முறை"என்றார்.