வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (12/01/2018)

கடைசி தொடர்பு:10:25 (12/01/2018)

மாட்டுவண்டி போட்டிக்கு தயாராகிவரும் காளைகள்! - உற்சாகத்தில் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் மாட்டு வண்டிப் போட்டிகளுக்காக காளைகளைத் தயார்படுத்தி வரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் மாட்டுவண்டிப் போட்டிக்கு தயாராகிவரும் காளைகள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மானாவாரி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் நடக்கும் மாட்டுவண்டிப் போட்டி மிகவும் சிறப்பு பெற்றது. மாட்டுவண்டிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள், தங்களது காளைகளை  தயார்படுத்தி வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாட்டுவண்டிப் போட்டி நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்ததால், மாட்டுவண்டிப் போட்டிகள்  நடைபெறவில்லை. இதனால் பந்தயக் காளைகள் பராமரிப்பின்றி களை இழந்து விட்டது. 

தூத்துக்குடியில்  மாட்டுவண்டிப் போட்டிக்கு தயாராகிவரும் காளைகள்

தற்போது மாட்டுவண்டிப் போட்டிக்கு தடை ஏதும் இல்லாத நிலையில், விவசாயிகள் தங்களது காளை மாடுகளை மாட்டு வண்டிப் போட்டிக்காக தயார் செய்து வருகிறார்கள் . ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று இப்பகுதியில் நடக்கும்  மாட்டு வண்டிப் போட்டிக்கு களம் இறங்க காளைகளை மும்முரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இசக்கிராஜனிடம் பேசினோம், "மாட்டுவண்டிப் போட்டியில் களமிறக்கும் காளை மாடுகளை அதிகாலையில் தினமும் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவோம்.  குளம், கண்மாய் மாடுகளை தண்ணீரில் நீச்சல் அடிக்க வைப்போம். தொடர்ந்து,  உளுந்து, பிண்ணாக்கு, பேரிச்சை ஆகியவை தீவனமாகக் கொடுப்போம். மேலும் மாடுகளின் கால்கள் வலிமையாக இருக்க பகலில் ஒரு காளைக்கு 2 நாட்டுக்கோழி முட்டை மற்றும் மாலையில் ஆறவைத்த ஆட்டுக்கால் சூப் கொடுப்போம். போன வருஷம் எங்க கிராமத்துல மாட்டு வண்டிப்போட்டி நடக்கல. அதனால, இந்த வருஷம் நடக்கும் போட்டியை ஆர்வத்தோட எதிர்பார்த்துக் காத்திருக்கோம்" என்றார்.

தூத்துக்குடியில்  மாட்டுவண்டிப் போட்டிக்கு தயாராகிவரும் காளைகள்
 

மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வரும் இந்த விவசாயிகளுக்கு, விவசாயம் போதிய அளவில் இல்லை என்ற நிலையிலும் கூட, மாட்டுப் போட்டிக்காக தங்களது காளைகளை உற்சாகமாக தயார் செய்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க