வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (12/01/2018)

கடைசி தொடர்பு:11:15 (12/01/2018)

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம்! - கொந்தளிக்கும் வேதாரண்யம் மக்கள்

அகல ரயில்பாதை திட்டத்துக்காக 12 ஆண்டுகளுக்கு முன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கிறார்கள் வேதாரண்யம்வாசிகள்.  

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரைப் பகுதி உப்பு உற்பத்திக்கும், கடல் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். கோடியக்கரை-வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் குறுகிய ரயில்பாதையில் இயங்கி வந்த ரயில்வே போக்குவரத்து தொழிலுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் மூலம் உப்பு, மீன், கருவாடு மற்றும் சவுக்கு மரம் போன்றவை அதிகளவில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.  இதன் மூலம் வியாபாரிகள் பயனடைந்ததோடு, ரயில்வே நிர்வாகமும் ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது.  

railway

இந்நிலையில், இந்தியாவிலுள்ள குறுகிய ரயில்பாதைகள் அனைத்தும் அகலப் பாதைகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி இந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அத்துடன் அகஸ்தியம்பள்ளியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. இவை யாவுமே ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அவ்வப்போது கிடப்பில் போடப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  திருத்துறைப்பூண்டியிலிருந்து, கோடியக்கரை வரையில் 42 பாலங்கள் கட்டும் பணியும் இன்னும் நிறைவடையவில்லை.  வேதாரண்யம் சந்நிதியிலிருந்து கடலுக்குச் செல்லும் சாலை நடுவே மேம்பாலம் அமைக்கும் பணியும் பாதியிலேயே நிற்கிறது.  இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே, நின்றுபோன அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும் தொடங்கி, விரைவுபடுத்தி இந்தப் பகுதியில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க