மறைந்த மூத்த சோசலிஸ தலைவர் சென்னியப்பனுக்கு விவசாயிகள் அஞ்சலி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த சோசலிஸ தலைவர் மு.சென்னியப்பன் நேற்று மறைந்தார். அவருக்கு விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.

 

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன், மூத்த சோசலிஸ தலைவர் ஆவார். கீழ்பவானி பாசன அமைப்புகளை உருவாக்க அரும்பங்கு ஆற்றியவர். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். களத்துமேடு என்னும் விவசாயிகள் சங்க இதழை ஈரோட்டில் இருந்து நடத்தியவர். பாசன மேலாண்மை இதழையும் நடத்திய இவர், சிறந்த கருத்துரையாளராக கருதப்பட்டார். அவர் 90 வயதில் இயற்கை எய்தினார்.

அவரைப் பற்றி பேசிய தற்சார்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னையன், "மூத்த சோசலிஸ்ட் தலைவரும், விவசாய இயக்கத்தின் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகவும் இருந்து வழிகாட்டியவர் மு.சென்னியப்பன். மு.செ அவர்களோடு நடத்திய விவாதங்களின் தொடர்ச்சியில்தான் அறிவியல் சோசலிஸத்தைப் புரிந்துகொண்டோம். 1980 களில் தருமபுரியில் நடந்த என்கவுன்டர் படுகொலைகள் பற்றிய விவாதத்தில், 'ஜனநாயகம் மறுக்கப்படும்போது வன்முறை சரியானது' என்ற கோட்பாட்டுப் புரிதலைத் தந்தவர்.
 

1992களில் டங்கல் திட்ட எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தபோது சேலம் ஆசிரியர் துரைசாமி அவர்களோடு இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். புதிய காலனியம் பற்றி  விரிவாக எடுத்துரைத்தவர். மு.செ. அவர்களின் வாழ்வும் பணியும் ஒரு சித்தாந்தத்துக்கானது. அவர் ஏற்றுக்கொண்டிருந்த லோகியா உருவாக்கிய சோசலிஸக் கோட்பாடு நடைமுறை சாத்தியப்பாடு கொண்டதல்ல எனினும் அதில் மு.செ. அவர்கள் தெளிவோடு நடத்திய விவாதங்கள் என்னைப் போன்றவர்கள் மார்க்சியம் பயில வித்திட்டது. அந்தப் பெருமகனுக்கு தற்சார்பு விவசாயிகள்  சங்கம் தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. பொறுப்பாளர்கள் உடனடியாக எழுமாத்தூர் சென்று மலர்மாலை அணிவித்து இறுதிவணக்கம் செலுத்தினோம். இன்று நண்பகல் 12.00 மணியளவில் எழுமாத்தூர் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தற்சார்பு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் தோழர் புலவர் திருநாவுக்கரசு கலந்துகொள்கிறார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!