வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (12/01/2018)

கடைசி தொடர்பு:15:45 (28/06/2018)

பெண் போலீஸின் கணவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீஸின் கணவர் குடிபோதைக்கு அடிமையாக இருந்தார். அவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். ரயில் ஏறி அவரின் தலை துண்டானது.

கரூரை அடுத்த தாந்தோனிப் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர் பெண் காவலர் பிலோமினாள் மேரி (32). இவரின் கணவர் பழனிச்சாமி (38). கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மன வளர்ச்சி மற்றும் உடல் நலம் குன்றிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழனிச்சாமி டெய்லர் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது. அப்போதெல்லாம், அருகில் குடியிருப்பவர்கள் அவர்களின் சண்டையை விலக்கிவிடுவார்களாம். இந்நிலையில், நேற்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 'குடித்துவிட்டு ஏன் எங்களை இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்கள்' என்று பிலோமினாள் மேரி கேட்டிருக்கிறார்.

இதில், விரக்தி ஏற்பட்ட பழனிசாமி, கரூர்-திண்டுக்கல் ரயில்வே ட்ராக்கில் கத்தாழபட்டி என்னும் இடத்தில் ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துள்ளார். அப்போது, நாகர்கோவிலிலிருந்து கோவை நோக்கி வந்த ரயில் ஏறி, பழனிச்சாமியின் தலை துண்டிக்கப்பட்டு, ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். இச்சம்வத்தை அறிந்த வெள்ளியணைக் காவல்நிலைய போலீஸார் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பழனிச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.