`சென்னைக்கு வந்து காதலியை இழந்தேன்.. கையில் பத்துகாசுமில்லை' - போதையில் புலம்பிய வெளிநாட்டு இளைஞர் | 'I came to Chennai and lost my lover and money as well', says Finland army man

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (12/01/2018)

கடைசி தொடர்பு:19:42 (12/01/2018)

`சென்னைக்கு வந்து காதலியை இழந்தேன்.. கையில் பத்துகாசுமில்லை' - போதையில் புலம்பிய வெளிநாட்டு இளைஞர்

பின்லாந்தைச் சேர்ந்த எமிலியா

'இந்தியாவுக்கு வந்து என் காதலியை இழந்துவிட்டேன், சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல பணமும் இல்லை' என சென்னை வந்த பின்லாந்து இளைஞர் போலீஸாரிடம் புலம்பியிருக்கிறார்.

 
சென்னை திருவல்லிக்கேணி தனியார் விடுதியில் கடந்த 9-ம் தேதி பின்லாந்தைச் சேர்ந்த எமிலியா, அலக்ஸி ஜோயல் ஆகியோர் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். 10-ம் தேதி, எமிலியா, படுக்கையில் பிணமாகக் கிடந்தார். போதையிலிருந்த அலக்ஸி ஜோயல், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமிலியாவின் மரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பின்லாந்தைச் சேர்ந்த எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் காதலர்கள். சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு இருவரும் வந்துள்ளனர். டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த அவர்கள் மாமல்லபுரம் என பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு 9-ம் தேதி திருவல்லிக்கேணிக்கு வந்துள்ளனர். அங்குள்ள தனியார் விடுதியில் 207-ம் நம்பர் அறையில் தங்கியுள்ளனர்.  9-ம் தேதி இரவு விடிய, விடிய இருவரும் மது அருந்தி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதோடு, அவர்கள், பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்தியுள்ளனர். தலைக்கு ஏறிய போதையில் இருவரும் தங்களை மறந்துவிட்டனர். 10-ம் தேதி காலையில் போதையிலேயே அலக்ஸி ஜோயல் கண்விழித்துள்ளார். போதை மாத்திரைகளின் வீரியத்தால் எமிலியா இறந்துவிட்டார். அவரது ஆடைகள் விலகியிருந்தால் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனால் எமிலியாவின் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தோம். எமிலியாவின் மரணத்துக்கு அவர் அதிகளவில் சாப்பிட்ட போதை மாத்திரைகள்தான் காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அலக்ஸி ஜோயலுக்கு, எமிலியா இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் கதறி துடித்தார். 
பிரேத பரிசோதனை முடிந்ததும் எமிலியாவின் உடலைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப டெல்லியில் உள்ள தூதரகத்தின் உதவியை நாடினோம். அவரது உடலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.  இவர்கள் இருவரின் விசா, வரும் 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் அலக்ஸி ஜோயலையும் அவரது சொந்த நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அவரது சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் உடனுக்குடன் கேட்டறிந்து வருகிறோம். தற்போது, அலக்ஸி ஜோயல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றனர். 

  பின்லாந்தைச் சேர்ந்த அலக்ஸி ஜோயல்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பின்லாந்தைச் சேர்ந்த எமிலியாவின் மரணத்துக்குப் போதை மாத்திரைகள் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நாட்டில் போதை மாத்திரைகளுக்கு அடிமையாக பலர் இருப்பதாக அலக்ஸி ஜோயல் விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தார். சம்பவத்தன்று  எமிலியாவும், அலக்ஸி ஜோயலும் போதைக்காக மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளனர். இருவரும் தலா 20-க்கும் மேற்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டதாக அலக்ஸி ஜோயல் தெரிவித்தார். அதன்விளைவு, எமிலியாவின் உயிர்பறிப்போனது. நல்லவேளையாக அலக்ஸி ஜோயல் காலையில் கண்விழித்துவிட்டார். இதனால்தான் அவரை எங்களால் காப்பாற்ற முடிந்தது. அவர், கண்விழிக்கவில்லை என்றால் அலக்ஸி ஜோயலும் இறந்திருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 


அலக்ஸி ஜோயலிடமிருந்து கைப்பற்ற மாத்திரைகள், சென்னையில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வாங்கப்பட்டவைகள். அலக்ஸி ஜோயலிடம் விசாரித்த சமயத்தில் அவர், போதை மாத்திரைகளைச் சர்வசாதாரணமாக வாயில் மென்றுகொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அப்போது, அவர், எங்கள் நாட்டில் இதுபோன்ற மாத்திரைகளை சர்வசாதாரணமாக சாப்பிடுவோம் என்று கூலாகக் கூறினார். தற்போது, ஊருக்குத் திரும்பிச் செல்ல அலக்ஸி ஜோயலிடம் பணமில்லை. இதனால், தூதரகம் மூலம் அவரது பெற்றோரைத் தொடர்புகொண்டுள்ளோம்.  


இதற்கிடையில், காதலியை இழந்த சோகத்தில் அலக்ஸி ஜோயல் இருக்கிறார். 'இந்தியாவுக்கு வந்து என் காதலியை இழந்துவிட்டேன்' என்று அலக்ஸி ஜோயல் புலம்பினார். அவருக்கு ஆறுதல் கூறியுள்ளோம். வெளிநாட்டினரின் வாழ்க்கை ஸ்டைலுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. நாடு விட்டு நாடுவரும் அவர்களிடம் பணமில்லாததது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்