மாமல்லபுரம் பாரம்பர்ய சின்னங்களுக்கு ரசாயனக் கலவை பூச்சு!

மாமல்லபுரம் பகுதியில் உள்ள பாரம்பர்ய கலைச் சின்னங்களை ரசாயனக் கலவை மூலம் தொல்லியல் துறை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர்கள் மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள பாறைகளில் சிற்பங்களை செதுக்கி வைத்திருக்கின்றனர். தொல்லியல் துறையால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மாமல்லபுரம் ஐந்து ரதம்

மாமல்லபுரத்தில் உள்ள தொன்மையான கலைச்சின்னங்கள் சர்வதேச பாரம்பர்ய கலைச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிக அளவில் வருகிறார்கள். இங்கு கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய புராதான கலைச்சின்னங்கள் உள்ளன. கடற்கரை ஓரத்தில் இவை அமைந்திருப்பதால், கடல்காற்றில் உள்ள உப்புத்ன்மை காரணமாக பொலிவை இழந்துவருகின்றன. இத்தகைய பாதிப்பிலிருந்து தொன்மையான சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், தொல்லியல் துறையின் ரசாயன பிரிவினர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது பாதிப்பு ஏற்படும்போது பாறைகளில் ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம்.

தற்போது ஐந்து ரதத்தில் அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நீரில் தயாரித்த காகித கூழ்மத்துடன் ரசாயனத் திரவம் கலந்த கலவை பாறைகளின் விளிம்பில் தேவைக்கேற்ற அளவில் பூசிவருகின்றனர். பின்பு அக்கலவையைப் பாறைகளில் இருந்து எடுக்கும்போது பறவைகளின் எச்சம், உப்பு படிந்த அழுக்கு ஆகியவை நீங்கி கலைச்சின்னங்கள் புதிய பொலிவைப் பெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!