வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (12/01/2018)

கடைசி தொடர்பு:14:20 (12/01/2018)

திருநெல்வேலியில் கல்லூரி மாணவரின் தலையைத் துண்டித்துக் கொன்றக் கொடூரம்..!

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஐ.டி.ஐ மாணவரின் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்த கும்பலைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இளைஞர்களுக்குள் நடந்த மோதல் கொலையில் முடிந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொடூரக் கொலை

நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், முருகன். 17 வயது நிரம்பிய இவர் வீரகேரளம்புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். நேற்று மாலை நண்பர்களின் செல்போன் அழைப்பின் பேரில் வீட்டை விட்டுச் சென்ற முருகன் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. அதனால் அவரது பெற்றோர் அவரைத் தேடினார்கள் அப்போது, முருகன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சுடலைமாடன் கோயில் அருகே உள்ள குளத்தின் அருகே பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடையநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம், நடந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த முருகனும் அவரது நண்பர்களான செல்லதுரை, கோபி, விநோத் ஆகியோர் சேர்வராயன்கோயிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது அந்த வழியாக மணிகண்டன், முத்து, பெரியசாமி, தங்கப்பாண்டியன், முத்துக்கரடி ஆகியோர் பைக்கில் வேகமாக வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்களுக்குள் தகராறு இருந்திருக்கிறது. இந்த நிலையில், மணிகண்டன் வந்த பைக் அங்கிருந்தவர்கள் மீது லேசாக இடித்துள்ளது. அதனால் முருகனும் அவருடன் இருந்தவர்களும் மெதுவாகச் செல்லுமாறு எச்சரித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இரு குழுவினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் வந்த தங்கப்பாண்டியன் என்பவர் கோபியை கடித்துள்ளார். இதனால் காயமடைந்த கோபியை மற்றவர்கள் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது முருகன் மட்டுமே அங்கே இருந்திருக்கிறார். தனியாக அவருடன் தகராறு செய்த அந்தக் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதுடன், தலையைத் துண்டித்தனர். 

இரவு முழுவதும் அவரது உடல் கோயில் அருகிலேயே கிடந்துள்ளது. காலையில் அவரைத் தேடிய உறவினர்கள் முருகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். அனைத்துக் குற்றவாளிகளும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என கடையநல்லூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.