போக்குவரத்துப் போலீஸாருக்கு ’பாடி ஒன் கேமரா’: கேரளாவைத் தொடர்ந்து நெல்லையில் அசத்தல்!

போலீஸாருக்கு கேமரா

கேரளாவில் போக்குவரத்துப் போலீஸாருக்கு ‘பாடி ஒன் கேமரா’ அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுபோல நெல்லையில் போலீஸாருக்கு கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் போலீஸாரின் நடவடிக்கையும் வாகன ஓட்டிகளின் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ள முடியும். 

கேரளா மற்றும் தெலுங்கானாவில் போக்குவரத்துப் போலீஸாருக்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும்போதும் போக்குவரத்தைச் சீர்படுத்தும்போதும் கண்டிப்பாக இந்தக் கேமராக்களை உடலில் பொருத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களில் போக்குவரத்து போலீஸாரின் செயல்பாடுகள் எந்த வகையிலும் விமர்சனத்துக்கு உள்ளாகாத வகையில் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழகத்திலும் இதேபோல ’பாடி ஒன் கேரமா’ திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 12 மாநகராட்சிகளிலும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பரிட்சார்த்தமாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதனை யாரும் இன்னும் பயன்படுத்தவில்லை. ஆனால், நெல்லையில் இந்த கேமராவை போக்குவரத்துப் போலீஸார் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் போலீஸார் நடத்தும் பேச்சுக்கள், அவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான விவரங்கள் போன்றவை பதிவாகிறது. இதனால் எந்தத் தவறுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கேமராக்களில் 32 ஜி.பி மெமரி கார்டு போட்டுக்கொள்ள முடியும். அத்துடன் கேமராவில் உள்ள தகவல்களை இதற்கென உள்ள சிஸ்டத்தில் டவுன்லோடு செய்த பின்னரே அழிக்க முடியுமே தவிர, போலீஸாரே அழித்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

இந்தக் கேமராவின் செயல்பாடு நெல்லையில் உபயோகத்துக்கு வந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கேமராவில் டிஸ்பிளே வசதியும் உள்ளதால், ரெக்கார்டின்போது கேமராவின் செயல்பாடுகளைப் பார்த்துக்கொள்ளவும் வசதி உண்டு. வீடியோ மட்டும் அல்லாமல் போட்டோ எடுக்கவும் வசதி இருக்கிறது. நெல்லையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டரான சாது சிதம்பரம் இந்த கேமராவுடன் போக்குவரத்தைச் சரிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதுபற்றி அவரிடம் பேசுகையில், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தக் கேமராவை அரசு அளித்த போதிலும் பயன்படுத்தப்படாமலேயே கிடந்தது. நெல்லை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பெரோஸ்கான் அப்துல்லா வந்த பின்னர் இதனைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். எங்களின் பணிக்கு இந்தக் கேமரா மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. 8 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் பேட்டரி கொண்டிருப்பதால் நீண்ட நேரத்துக்கு செயல்படுகிறது’’ என்றார் உற்சாகமாக.       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!