அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு! - மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

 

ஜல்லிக்கட்டு

மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பானதாக கருதப்படும். இந்நிலையில், அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ``அவனியாபுரத்தில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவார்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இதேபோல் இந்தாண்டும் ஜனவரி14-ல் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே, ஜல்லிக்கட்டின்போது சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் இருப்பதால், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரயணன், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது விழாக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "30 நாள்களுக்கு முன்பே முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக இதுவரை 300 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜல்லிகட்டில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கலாம். அதற்கு எவ்விதத் தடையும் இல்லை" என தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!