ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!

 ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் நடராஜன்.

ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய ஆட்சியர்
 

ராமநாதபுரத்தில் சமூக நலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 6 முதல் 18 வயது வரையிலான 75 பெண் குழந்தைகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்தக் காப்பகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் இந்தப் பொங்கல் விழாவில் பங்கேற்று, ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கரும்பு மற்றும் இனிப்புகளை வழங்கி, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன்பின், அவர்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர், ''தமிழர்களின் கலாசாரம், விழாக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறையைக் கொண்டதாகும். நம் முன்னோர்கள் அனைவரும் உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அதனடிப்படையில் உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக இருக்கும் இயற்கையை வணங்கி நன்றி சொல்லும் வகையிலும், உழவுக்குத் துணை செய்யும் கால்நடைகளை வணங்குவதுடன், சுற்றத்தாருடன் அன்பை பகிரும் விதமாகவும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் போன்றவற்றைக் கொண்டாடி மகிழ்கிறோம். அதனடிப்படையில், இந்த இல்லத்தில் உள்ள உங்களோடு இணைந்து பொங்கல் கொண்டாடுவதை மகிழ்வாகக் கருதுகிறேன். இந்த மகிழ்வான தருணத்தைக் கொண்டாடுவதுபோல், நீங்கள் கல்வியையும் கொண்டாட்டமாகக் கருதி மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் பயின்று நன்மதிப்பைப் பெற வேண்டும்'' என்றார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!