எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பணபலம் படைத்தவர்கள் இல்லை! ஸ்டாலினுக்குப் பதில்சொன்ன ஓ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க வழிவகைசெய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 

எம்.எல்.ஏ-க்களின் ஊதியம் 50,000-த்திலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஊதிய உயர்வு தவிர, எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.12,000-த்திலிருந்து ரூ.20,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தியபோது, அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை போதுமான நிதி இல்லை என்று கூறி மறுத்த அரசு, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது எப்படி என்று தி.மு.க. கேள்வி எழுப்பியது. இதனால், ஊதிய உயர்வு தங்களுக்குத் தேவை இல்லை என்று தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது எம்.எல்.ஏ-க்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என்று கேள்வி எழுப்பினார். 

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஊதிய உயர்வு தொடர்பாகக் கடந்த 6 மாதங்களாகப் பேசாத ஸ்டாலின் இப்போது மட்டும் பேசுவது ஏன். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பணபலம் படைத்தவர்கள் இல்லை. ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா, உரிய வசதி இல்லாமல் தொகுப்பு வீட்டில்தான் இன்றுவரை வசித்து வருகிறார். எம்.எல்.ஏ-க்களின் கருத்துகள், கோரிக்கைகள் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஊதிய உயர்வு தேவையில்லை என்றால் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் அளித்துவிடுங்கள்’ என்றார். சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பு மசோதா மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நேரடித் தேர்வு மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!