பைரவா காளை...பகவதி காளை...இது விஜய் ரசிகரின் நாட்டுக்காளை ஆர்மி!

    சிவாவின் காளைகள்

பொங்கல் இதோ...வந்துவிட்டது. கடந்த வருடம் இந்நேரம், 'அனுமதி வழங்கு. அனுமதி வழங்கு. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கு' என்ற கோஷத்தோடு உலகமெங்கும் அலை அலையாகத் திரண்ட இளைஞர்கள் வரலாற்றுப் புரட்சியைச் செய்தார்கள். அதன் பலன்... இந்த வருடம் பொங்கலையொட்டி, எவ்வித இடரும் இல்லாமல் தாம்தூம் என்று தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட, இளைஞர்கள் மத்தியில் நாட்டு மாடுகளை வளர்க்கும், பாதுகாக்கும் எண்ணமும் தழைத்தோங்கியிருக்கிறது.


 சிவா

"அதான் சார்..நானும் நாலு நாட்டுக் காளைகளை வாங்கி, தோட்டத்தில் வைத்து வளர்க்கிறேன். எங்க இளைய தளபதி விஜய் கடந்த வருடம் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல கலந்துகிட்டார். அதன்பிறகு, வந்த மெர்சல் படத்துல,'ஆளப்போறான் தமிழன்..' பாடலில் நாட்டுக்காளைகளை காட்டி இருப்பார். அப்புறம் ஒரு காட்சியில் தனது வீட்டில் நாட்டுக் காளையை கட்டி வைத்திருப்பதாக காட்சி அமைக்க வைத்திருப்பார். அதோட, நாங்க அவரை பார்க்கிறப்பெல்லாம், 'நாட்டுமாடுகளை வளர்க்கணும், பாதுகாக்கணும்'ன்னு தனது ஆசையைச் சொல்வார். அதான், நாட்டுக் காளையை வளர்க்கணும்ன்னு நாலு காளைகளை வாங்கி வளர்க்கிறேன். . விஜய் மக்கள் இயக்கத்தின் தர்மபுரி மாவட்டத் தலைவர். அதைவிடவும் இன்னொரு ஸ்பெஷல், இவர் வளர்க்கும் நான்கு காளைகளில் மூன்றிற்கு விஜய் படங்களின் பெயரையும், இன்னொன்றிற்கு தளபதி என்றும் பெயர் வைத்திருக்கிறார். 


 சிவா

"எனக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்துல உள்ள நத்தப்பட்டி. எனக்கு 25 ஏக்கர் நிலம் இருக்கு சார். விவசாயம்தான் எனக்கு பிரதான தொழில். விஜய் மக்கள் இயக்கத்துல மாவட்டத் தலைவரா 23 வருஷம் இருக்கேன். எங்க தாத்தா காலத்துல எங்க தோட்டத்துல ஏகப்பட்ட நாட்டுமாடுகள் இருந்துச்சு. எங்கப்பா காலத்துல அந்த எண்ணிக்கை குறைஞ்சு இருந்துச்சு. அதுவும், கலப்பின பசு மற்றும் காளைகள் அதிகம் இருந்துச்சு. கடந்த ஐந்து வருஷமா நான்கு கலப்பின பசுக்கள் மட்டுமே இருந்துச்சு. கடந்த வருஷம் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம், இளைய தளபதி நாட்டுமாடுகள் மீது காட்டிய பரிவு எல்லாத்தையும் பார்த்து, எனக்கும் நாட்டு காளைகளை வாங்கி வளர்க்கணும்ன்னு ஆசை வந்துச்சு. அதான், 90 ஆயிரத்துல இரண்டு காங்கேயம் நாட்டுக் காளைகளையும், ஈரோடு கோசாலாவுல கம்மி ரேட்டில் விவசாயிகளுக்கு மாடு தருவதை பயன்படுத்தி இரண்டு இதர நாட்டுக் காளைகளையும் வாங்கினேன். ஒவ்வொண்ணுக்கும் இப்போ நாலு வயசு. 

 Bull

வேட்டைக்காரன், பகவதி, பைரவான்னு மூணு காளைகளுக்கு விஜய் படங்களின் பெயர்களை வெச்சிருக்கேன். இன்னொன்னு பேர் தளபதி. ஒவ்வொரு காளைக்கும் நாலு வயசாவுது. சும்மா கொழுத்த திமிலோடு, என் தோட்டத்தை சுத்தி வருதுங்க. கூரிய, வலுவான தங்களது கொம்புகளால தரிசா கிடக்கும் வயல்களை குத்தி தோண்டுதுங்க. தினமும் அந்த நாலு மாடுகளையும் குளிப்பாட்டுறது, அதுக்கு வேளாவேளைக்குச் சோளத்தட்டை, புண்ணாக்கு, தவிடு, வைக்கோல், புல், அவத்திக்கீரைன்னு காளைகளுக்குப் புடிச்ச உணவை தருவதுன்னு நானேதான் நேரடியா இருந்து அதுகளை கவனிக்கிறேன். அதுங்களும் நான் வந்தாதான் சாப்பிடுங்க.

bull

என்னை தூரத்துல பார்த்துட்டாலே, தலையை ஆட்டி பாசத்தை, சந்தோஷத்தை வெளிப்படுத்துங்க. இதைதவிர,காளைகளைப் பராமரிக்க நான்கு கூலி ஆட்களை நியமிச்சுருக்கேன். என்ன வேலை, எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒருநாள் காளைகளை பார்க்கலன்னா, எனக்கு தூக்கமே வராது. காளைகள் ஜல்லிக்கட்டுல விடுற அளவுக்கு வளர்ந்துட்டு. ஆனால், ஜல்லிக்கட்டுல விடுற அளவுக்கு இன்னும் பழக்கல. அதனால், பல ஊர்கள்ல இருந்தும் அழைப்பு வந்தும், இந்த வருஷம் ஜல்லிக்கட்டுல விட போறதில்லை.

bull

பக்கா டிரைனிங்கோடு அடுத்த வருஷ ஜல்லிக்கட்டுல நாலு காளைகளையும் கெத்தா இறக்கிவிடுவேன். அப்போ, இளையதளபதியை என் மாடுகள் ஜல்லிக்கட்டுல விளையாடுறதை பார்க்க ஏற்பாடு செய்யலாம்ன்னு இருக்கேன். இருந்தாலும், இந்த வருஷம் தர்மபுரியில்  நடக்க இருக்கும் எருதுக்கட்டுவில் கலந்துக்க வைக்க போறேன். எருதுக்கட்டு என்பது மாடுகள் கழுத்தில், நீண்ட கயிறை கட்டி, அதை பாய்ச்சலுக்கு விடுவது. ஆனால், கயிறு ஒருத்தர் கன்ட்ரோலில் இருக்கும். அடுத்த வருஷம் பாருங்க... நாலு காளைகளும் ஜல்லிக்கட்டுக்கு வந்துடும். சும்மா மெர்சலா இருக்கும்ல" என்கிறார் சிலாகித்தபடி.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!