குற்றவாளிக்கு ஆதரவாக எஸ்.ஐ-யை மிரட்டிய ஆளுங்கட்சி வழக்கறிஞர்? - வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ

குற்றவாளிகளுக்கு ஆதரவாக எஸ்.ஐ-யை மிரட்டிய ஆளுங்கட்சி வழக்கறிஞரின் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாகக் காவல்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆடியோ

நெல்லை மாவட்டம் சின்னக் கோவிலான்குளம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர், கற்பகராஜா. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்கிறார்கள், உடன் பணியாற்றும் போலீஸார். சின்னக் கோவிலான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளப்பாண்டியன் என்பவரின் மகன் சந்திரன் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்துவிட்டார். அதனால் காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட சந்திரனைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் வழக்கை விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா, அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் இல்லாததால் குடும்பத்தினரிடம் அவரைப் பற்றி விசாரித்துவிட்டு வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சந்திரனின் உறவினரான பாலசுப்பிரமணியன் என்பவர் ஆளுங்கட்சி ஆதரவாளர். தற்போது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளதாகத் தெரிகிறது.

தன் உறவினரான சந்திரனைப் போலீஸார் தேடிவருவது குறித்து அறிந்த பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டரைப் போனில் மிரட்டி உள்ளார். அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் பேசிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் வைரலாகப் பரவிவருகிறது. அந்த ஆடியோவில் எடுத்த எடுப்பிலேயே எஸ்.ஐ-யை ஒருமையில் பேசுகிறார். ’நீங்கள் யார்?’ என்று எஸ்.ஐ கற்பகராஜா கேட்டதும், ’நான் சென்னை ஐகோர்ட்டில் பி.பி-யாக இருக்கேன்...’ என்கிற முன்னுரையுடன் அவர் பேசத் தொடங்குகிறார்..

`சந்திரன் என் மச்சினன். அவனைத் தேடி வீட்டுக்கெல்லாம் போனீயாமே.. அவன் என் மச்சினன் என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. டார்ச்சர் செய்யாதீங்க. நீ டார்ச்சர் பண்ணிணா உன்னோட வேலைக்கு உலை வச்சிட்டேனு அர்த்தம்’ என்று சொன்னதும் சுதாகரித்துக் கொண்ட எஸ்.ஐ.கற்பகராஜா, நீங்க இப்படி மிரட்டலாமா. அவர் அடிச்சி ஒருத்தர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் மேல வழக்கு இருக்கு. அதனால் அவரைத் தேடத்தானே செய்வோம்’ என்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரசு வழக்கறிஞர் என்று சொல்லிக்கொள்ளும் பாலசுப்பிரமணியன், ``அவன் வெட்டட்டும்... குத்தட்டும்... நான் அவனை விடச் சொல்றேன். கேட்பியா மாட்டியா. என் மச்சினன்னு சொன்ன பிறகும் உதவி செய்ய மாட்டியா’ என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. காவல்துறையினர் மட்டும் அல்லாமல் சமூக ஆர்வலர்களும் இது பற்றி விவாதித்து வருகிறார்கள். 

மிரட்டல் பேச்சு

இதுபற்றி நெல்லை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரான அருண்சக்தி குமாரிடம் கேட்டதற்கு, ‘’நானும் அந்த ஆடியோவை கேட்டேன். குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக ஒருவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது தெரிகிறது. இது தொடர்பாக அந்த சப்-இன்ஸ்பெக்டரும் புகார் செய்துள்ளார். அதனால் இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டு உள்ளேன். தவறு நடந்திருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்’’ என்றார் திட்டவட்டமாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!