வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (12/01/2018)

ஆளில்லா விமானம் மூலம் வெள்ள அபாயப் பகுதிகள் ஆய்வு..!

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் வெள்ள அபாயப் பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தொடங்கிவைத்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தாமிரபரணி ஆறு 131 கி.மீ தூரம் பாய்ந்து ஓடுகிறது. இதில் 84 கி.மீ தூரம் நெல்லை மாவட்டத்திலும் 47 கி.மீ தூரம் தூத்துக்குடி மாவட்டத்திலும் பாய்ந்து ஓடுகிறது.

இதில் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் தமிழக அரசுடன் அண்ணா பல்கலைக்கழகப் பேரிடர் மேலாண்மை மையமும் இணைந்து  தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் பணி இன்று தொடங்கியது. இப்பணி 45 நாள் முதல் 60 நாள்கள் வரை நடைபெறும். இதன் மூலம் வெள்ளம் வரும் பகுதிகளை அடையாளம் கண்டு வரைபடம் அமைக்கப்படும்.

இந்த வரைபடத்தின் மூலம் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகள்,  அடைப்புகள் ஏற்பட்டப் பகுதிகள் மற்றும் தடைபட்ட நீர் வரத்துப் பகுதிகள் ஆகியவை அடையாளம் கண்டு சீரமைக்கப்படும். அத்துடன், கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை எப்பகுதிகளில் தடுப்பணை அமைத்து சேமிக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். இந்த ஆளில்லா விமானம் 175 மீட்டர் உயரத்தில் கண்காணிப்பு செய்யும் திறன் கொண்டது. 

இந்த ஆளில்லா விமான ஆய்வு தாமிரபரணியில் மருதூர் அணைக்கட்டில் இருந்து புன்னக்காயல் கடற்கரை வரையில் 209.22 சதுர கி.மீ தூரத்திற்கு மேப் செய்யப்படும். இதில் கோரம்பள்ளம், வைப்பாறு மற்றும் உப்பாற்று ஓடைப்பகுதியும் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதிகளும் அடங்கும். ஏற்கெனவே 36 வெள்ள அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க