காற்றில் பறந்த இலவசக் கழிப்பறை கூரைகள்..! பொதுமக்கள் அதிருப்தி

மத்திய அரசின் நிதி உதவியுடன் கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டு வரும் இலவசக் கழிப்பறைகள் தரமற்ற வகையில் கட்டப்படுவதால் கழிப்பறை கூரைகள் காற்றில் வீசி அடிக்கப்பட்டுக்கிடக்கின்றன.


திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட பனைக்குளம் ஊராட்சியில் 4,000 பேர் வசித்து வருகின்றனர். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசின் நிதியின் மூலமாகக் கழிப்பறை இல்லாத வீடுகளில் இலவசக் கழிப்பறைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் முறையாக இல்லாத நிலையில் கடந்த மாதம் வீசிய புயல் காற்றில் சிக்கிய ஆஸ்பெட்டாஸ் சிமென்ட் சீட்டினால் மூடப்பட்ட கழிப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சேதமாகிக் கிடக்கிறது. 

தரமற்ற கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தியதோடு, திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள 33 கிராம ஊராட்சிகளிலும், தனிநபர் கழிப்பறை அமைப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பயனாளிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. அரசின் இலவசத் திட்டத்தின் கீழ் 12,000 ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்படும் கழிப்பறை பணிகளில் தரமற்றப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால்  பல இடங்களில் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே கழிப்பறைகள் சேதமடைந்து வருகின்றன. 

இதனால் அரசின் சுத்தமான இந்தியா என்ற நோக்கம் நிறைவேறாததுடன், இத்திட்டத்துக்கு என ஒதுக்கப்படும் நிதியும் வீணடிக்கப்படுகிறது. எனவே மாவட்டம் முழுமைக்கும் நடைபெற்றும் வரும் இலவசக் கழிப்பறைக் கட்டும் திட்டப் பணிகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என பயனாளிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!