வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:21:27 (13/01/2018)

கல்பாக்கத்தைச் சூழ்கிறதா அணுக்கதிர் வீச்சு?! - காரணம் அறியாமல் திணறும் விஞ்ஞானிகள்

அணுக்கதிர் வீச்சு கசிவுக்கான காரணம் தெரியாமல் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் விழிபிதுங்கி நிற்பதாகப் புகார் எழுந்துள்ளது. 'அணுஉலையில் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் கசிவு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். 

சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி இரவு முதல் அணு உலை நிறுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு போல் அல்லாமல், இந்தமுறை அணுக் கதிர் வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர். புகழேந்தியிடம் பேசினோம். " கல்பாக்கம் அணு உலையால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உடல்ரீதியாக ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கல்பாக்கம் அணு உலையில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி கனநீர் கதிர்வீச்சு ஏற்பட்டது. அந்தக் கதிர்வீச்சை சரிசெய்ய மூத்த பொறியாளர் பார்த்திபன் என்பவர் கதிர்வீச்சு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டார். பாதுகாப்பு கவச உடையுடன் சென்ற அவர், இதயமுடக்கத்தால் உயிரிழந்தார். அந்தக் கவச உடை பாதுகாப்பானதில்லை என்று இந்திய அணுசக்திக் கழகத்துக்கு, கல்பாக்கம் அணு உலை தொழிற்சங்கத்தினர் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளனர். 'இது ஒரு கில்லர் சூட்' என்று அந்தக் கடிதத்தில் தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதுபோல் பல்வேறு விதிமீறல்களில் கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பொதுவாக அணு உலை அமைந்துள்ள பகுதியில் உள்ள கதிர்வீச்சின் அளவு டி.ஏ.சி/ஹவர் என்ற அலகால் அளக்கப்படும். அதன்படி, கதிர்வீச்சு கசிவின் அளவு 1,000 DAC/Hour என்பதை எட்டிவிட்டால், அங்கு அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மூத்த பொறியாளர் பார்த்திபன் சென்றபோது 4,0003 DAC/hour என்ற அளவில் கதிர்வீச்சு இருந்துள்ளது. இந்த அளவீடும் குறிப்பிட்ட கதிர்வீச்சு பாதிப்பு இருந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல; இது ஒரு ரேண்டம் அளவீடு. பாதிக்கப்பட்ட பகுதியில் இதைவிட 5 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், பார்த்திபனின் உயிரிழப்புக்கு அதிகப்படியான கதிர்வீச்சுகூட காரணமாக இருக்கலாம். 

மருத்துவர் புகழேந்திஇந்தநிலையில், கடந்தசில நாள்களுக்கு முன்னர் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அன்றைய தினம் அணுக் கதிர்வீச்சு 200 DAC/hour என்பதில் தொடங்கி 1,000 DAC/hour என்ற அளவு வரை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. இதனாலேயே, அணு உலை நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சாதாரண தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அணு உலையில் நிறுத்தப்பட்டிருப்பதாக நிர்வாகம் கூறி வருகிறது. இந்திய அணுசக்தித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக அணுக்கதிர் வீச்சுக் கசிவுக்கான காரணம் என்ன என்றும்; எந்தப் பகுதியில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகம் திணறிவருகிறது. அணுக்கதிர் வீச்சு அபாய அளவை எட்டியும் அவசரநிலை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோல், கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும்போது அதனை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியையும் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. 

அதேபோல், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கதிர்வீச்சு காரணமாக ரத்தப்புற்று நோய்க்கு ஆளாகின்றனர். ரத்தப் புற்றுநோயால் (AML) காவாக்கரை பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளார். அதேபோல், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி மணமைப் பகுதியைச் சேர்ந்த அஞ்சலை என்பவரும் உயிரிழந்துள்ளார். கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டால், அதனால் சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கதிர் வீச்சை மணிக்கு 271 கியூரி என்ற அளவில் உயரமான புகைப்போக்கிகள் வழியாக வெளியேற்ற வேண்டும். ஆனால், அந்த விதியும் பின்பற்றப்படவில்லை. கடந்தாண்டு மே மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கதிர்வீச்சு முறையே 485.97 மற்றும் 391.96 கியூரி என்ற அளவில் வெளியேற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய கதிர்வீச்சு குறித்து மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்குக் கல்பாக்கம் அணு மின் நிலையம் சார்பில் கடிதம் மூலம் உதவி கோரப்பட்டிருக்கிறது. இதற்குப் பதில் அளித்த மும்பை, பாடா அணுசக்திக் கழக அதிகாரிகள், ' கதிர்வீச்சுக்கான காரணத்தை முதலில் கண்டறியுங்கள், அதன்பின்னர்  அதைத் தீர்க்க உதவி செய்கிறோம்' எனப் பதில் அளித்துள்ளனர். அணுக்கதிர் வீச்சு அபாய அளவை எட்டியும் அந்தப் பகுதியில் இதுவரை அவசரநிலை பிறப்பிக்கப்படவில்லை. கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கொடுக்கும் பொங்கல் பரிசு இதுதானா?" என்றார் மிகுந்த கவலையோடு. 

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அணுமின் நிலைய நிர்வாகத்தைத் தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய அணுமின் நிலைய அதிகாரி ஒருவர், " சென்னை அணுமின் நிலையம் (MAPS) உலக நாடுகளில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.  பல வருடங்களாகச் சிறப்பாக இயங்கி வரும் இந்த அணுமின் நிலையம், கடந்த நிதி ஆண்டில் அதிக அளவில் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்தது  என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டு சுனாமி, 2015-ம் ஆண்டு பெருவெள்ளம், மற்றும் ஆண்டு தோறும் நிகழும் சூறாவளி புயல்கள் (2016-ம் ஆண்டு வர்தா புயல் உள்பட) பல இயற்கை பேரிடர்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. அதேபோல், அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்பொழுதும் மிகவும் பாதுகாப்புடன் இயங்கும் நிலையமாக இருந்து வருகிறது. ஊழியர்களின் கதிர்வீச்சு அளவு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது. கதிர்வீச்சு தகவல்களை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அளிப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கி வருகிறோம். அணு உலைக் கட்டடத்தின் கதிர் வீச்சு அளவு குறித்த தகவல்களை நாங்கள் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வேலையின் தன்மை, வேலையிடத்தின் நிலவரம் மற்றும் பயன்படுத்தும் பாதுகாப்பு முறைகள் குறித்து ஊழியர்கள் முழுவதும் அறிந்துள்ளனர். கதிர்வீச்சின் காரணமாக ஓர் அதிகாரி இறந்ததாக வெளிவந்த தகவல் முழுவதும் ஆதாரமற்றது. மருத்துவ அறிக்கையின்படி, இது இதய முடக்கத்தின் (cardiac arrest) காரணமாகவே அவர் இறந்தார். அணுமின் நிலைய உற்பத்தி நிறுத்தம் எனப் பேசப்படுவதில் உண்மை இல்லை’’ என்றதோடு முடித்துக் கொண்டார்.