பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது! - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக உள்ளார்.

வளர்மதி


தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் சென்ற ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற தகுதியான பெருமக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

விருது பெறுவோர் பட்டியல்:

1. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
2. பெரியார் விருது           -  பா.வளர்மதி
3. அம்பேத்கர் விருது       - டாக்டர் சகோ.ஜார்ஜ்.கே.ஜே
4. அண்ணா விருது           - அ.சுப்ரமணியன்
5. காமராசர் விருது          - தா.ரா.தினகரன்
6. பாரதியார் விருது         - முனைவர் சு.பாலசுப்ரமணியன் 
7. பாரதிதாசன் விருது     - கே.ஜீவபாரதி
8. திரு.வி.க விருது          - எழுத்தாளர் வை.பாலகுமாரன்
9. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - முனைவர் பா.மருதநாயகம்

மேற்காணும் விருதுகள் வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவில் முதல்வரால் வழங்கப்படும். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இதுதவிர, இவ்விழாவில் முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெற அரசாணைகள் அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளுவர் விருது மட்டும் இந்த (2018) ஆண்டுக்கானதாகும். மற்ற விருதுகள் அனைத்தும் சென்ற (2017) ஆண்டுக்கானவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!