சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல்; காவல் ஆய்வாளர் தலைமறைவு..!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் காவல் சிறப்பு ஆய்வாளராக வேலை பார்த்துவந்தவர் பாபா சிக்கந்தர். காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவரும் சிக்கந்தர், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் காவலர் ஒருவரின் 9 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகச் சிறுமியின் பெற்றோர் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். தகவலறிந்த சிக்கந்தர் தலைமறைவானார். புகார் தொடர்பாக விசாரணையில் இறங்கிய தேனி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். இது தொடர்பாக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெண்மணியிடம் பேசியபோது, "பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு கொடுமை அரங்கேறியிருக்கிறது.

அந்தச் சிறுமிக்கு மூளை பிரச்சனை காரணமாக அறுவைசிகிச்சை செய்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சிறுமி. நாங்கள் நேரடியாகக் காவலர் குடியிருப்புக்குச் சென்று விசாரணை நடத்தினோம். அப்போது பலரும் சிக்கந்தர் மீது குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே கம்பத்தில் வேலை பார்க்கும்போதும் இப்படி ஒரு பிரச்னையில் சிக்கித்தான் வீரபாண்டிக்கு மாறுதல் பெற்றுவந்திருக்கிறார். இங்கேயும் இப்படி செய்திருக்கிறார். அவரை உடனே தேடிப்பிடித்து கைது செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். நடந்தது காவலர் குடியிருப்பு, நடத்தியது காவல் ஆய்வாளர் என்பதால் காவல்துறையே ஆய்வாளரை தப்பிக்க வைத்திருக்கிறது. இப்போது வரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது" என்றார். இது தொடர்பாக மாவட்டக் காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, "சிக்கந்தர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவானவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!