ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன் - மகரஜோதி | Makara Jyothi is a celestial star which appears on the day of Makara Sankranthi day

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (12/01/2018)

ஜோதி வடிவில் காட்சிதரும் ஐயப்பன் - மகரஜோதி

சபரி மலை ஐயப்பன் சந்நிதியில் நடைபெறும் முக்கியத் திருவிழா மகர ஜோதி தரிசனம். 40 நாட்கள் மண்டலா பூஜைக்குப் பிறகு மகர ஜோதி விழா தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி மகர ராசியில் சூரியதேவன் பிரவேசிக்கும் உத்திராயன காலத் துவக்கமே மகர ஜோதி வேளை எனப்படுகிறது. அதன்படி வரும் தை 1-ம் தேதி (14-01-18) சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

சபரிமலை

விழாவின் முக்கிய நிகழ்வான மகர ஜோதி நாளன்று ஸ்ரீஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு கொண்டு வரப்படும். திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். அதன்பிறகு மாலை 6.40 மணி தொடங்கி 6.50 வரை ஸ்ரீசபரிமலை சந்நிதானத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஐந்தாவது மலையான காந்தமலைப் பகுதியின் பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக, தெய்வீக ஒளியாக மூன்று முறை மகரஜோதி எழும்பி காட்சியளிக்கும்.

ஐயப்பன்

லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கூடி நின்று அந்த ஜோதி தரிசனத்தை உணர்ச்சிப்பிரவாகத்தோடு தரிசிப்பார்கள். அப்போது எழும் ஐயப்ப சரண கோஷத்தில் சபரிமலையே அதிரும். பொங்கல் திருநாளில் ஸ்ரீஐயப்பனே ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பதாகச் சபரிமலை சந்நிதானம் தெரிவிக்கிறது.