வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/01/2018)

கடைசி தொடர்பு:23:30 (12/01/2018)

ஆர்.கே.நகரில் இரட்டை இலைச் சின்னம் இருந்தும் அ.தி.மு.க தோற்க இதுதான் காரணம்! தினகரன் பளீச்

பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கத் தினகரனும் அவரது ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் ரங்கசாமி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 7 பேர் காலை 11.35 மணிக்குச் சிறைக்குள் சென்றனர். சுப்ரமணி மட்டும் சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்யாததால், சசிகலாவைக் காண முடியாமல் வெளியில் நின்றார். பகல் 1 மணிக்கு பெங்களூரு புகழேந்தி சிறைக்குள் சென்றார். சசிகலாவை சந்தித்துவிட்டு சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் மட்டும் சரியாக 1.30 மணிக்குச் சிறையில் இருந்து வெளியே வந்தனர். 

பெங்களூரு வில் தினகரன் பேட்டி

தினகரன், புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் மூவர் மட்டும் பிற்பகல் 3.15 மணி வரை தொடர்ந்து சசிகலாவுடன் ஆலோசனை செய்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தினகரன், ``சசிகலாவை அரசியல்ரீயாகச் சந்திக்கவில்லை; சித்தி என்ற முறையிலேயே சந்தித்தேன், அவரின் மௌன விரதம் 31-ம் தேதி வரைக்கும் தொடர்கிறது. பல விஷங்களை எழுதிக் கேட்டார். சட்டமன்றத்தில் அரசியல் தலைவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைத் தெரிவித்தேன். என்னைவிட தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும்தான் அதிக நேரம் பேசினார்கள். பழனியப்பனும் சி.ஆர்.சரஸ்வதியும் நீண்ட நாள்களாகச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்து இன்று பார்த்தார்கள். 

போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானது, உயர் நீதிமன்றமும் போக்குரவத்து ஊழியர் கழகங்களும் ஒன்றிணைந்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது’’ என்றவரிடம் விரைவில் அவர் தொடங்கவுள்ள பேரவையின் பெயர் மற்றும் கொடி பற்றி கேட்டதற்குப் பொறுத்திருங்கள் என்றார்.

மேலும், ``மக்கள் நலன் மறந்துபோனதால்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இருந்தும் அ.தி.மு.க வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. அதனால்தான் நிர்வாகிகள் பலரும் எங்களை நோக்கி வருகின்றனர். எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு முடிந்ததும் மாற்றம் ஏற்படும் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். இரண்டு மாதத்தில் இந்த ஆட்சி முடியும். பாடலாசிரியர் வைரமுத்து இந்து மத கடவுளைப் பற்றிப் பேசியது தவறான கருத்து, அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது, அதேபோல, சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெற கனிமொழியும் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்றார். செங்கோட்டையன்தான் முதல்வர் என்று தீபக் கூறியது தவறான தகவல். யார் முதல்வர் என்பதை சசிகலாதான் முடிவு செய்வார்’’ என்றார் தினகரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க