வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/01/2018)

கடைசி தொடர்பு:23:00 (12/01/2018)

பெரியார் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் சுயநிதி கல்லூரிகளின் ஆதிக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் சுயநிதிக் கல்லூரிகளைச் சேர்ந்த 4 பேர் வெற்றிபெற்றனர். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்கள் வாக்களித்து 2 உறுப்பினர்களையும், செனட் உறுப்பினர்கள் வாக்களித்து 2 உறுப்பினர்களையும் மொத்தம் 4 பேர் தேர்தெடுக்கப்பட்டார்கள்.

இதில், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்கள் சேர்ந்து தேர்தெடுக்கப்படும் தேர்தலில் கே.கே.சி., அரசு  உதவி பெறும் கல்லூரி முதல்வர் தங்கராஜ், ஏ.வி.சி., சுயநிதி கல்லூரியின் முதல்வர் ப்ரியா, பாரதியார் சுயநிதி கல்லூரியின் முதல்வர் விஜயகுமாரி  ஆகிய 3 பேர் போட்டியிட்டார்கள். அதே போல செனட் உறுப்பினர்கள் சேர்ந்து தேர்தெடுக்கப்படும் தேர்தலில் விஜய வித்யாலயா சுயநிதி கல்லூரியை சேர்ந்த வேலுசாமி, லட்சுமி நாராயணா சுயநிதி கல்லூரியைச் சேர்ந்த செந்தில்குமார், எம்.கே.ஆர்., அரசு உதவி பெறும் கல்லூரியை சேர்ந்த பாரதி என 3 பேர் போட்டியிட்டார்கள்.  

இதில் சுயநிதி கல்லூரியை சேர்ந்த 4 பேரும் வெற்றி பெற்றார்கள். அரசு உதவி பெறும் கல்லூரியை சேர்ந்த 2 பேரும்  தோல்வி அடைந்தார்கள்.  இதற்கு காரணம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி கல்லூரி நிர்வாகிகளின் கூட்டமைப்பு (பாசம்) என்ற அமைப்பை வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரதிநிதிகள் ஆட்சிக்குழுவிற்குள் சென்றால் சுயநிதி கல்லூரிகள் ஆதாயம் அடைவதோடு  சுயநிதி கல்லூரிகள் மீது புகார்கள் வந்தாலும் துணைவேந்தரால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ரப்பர் ஸ்டாம்பாக வைத்திருக்க முடியும் என்று தங்கள் பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்கிறார்கள்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மொத்தம் 23 பேர் இருக்கிறார்கள். இதில்  சுகாதார செயலாளர், சட்ட துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில் நுட்ப கல்வி இயக்கக ஆணையாளர், மருத்துவக் கல்வி இயக்குநர், சட்டக் கல்வி இயக்குநர்  என 7 பேர் சிண்டிகேட் கூட்டத்திற்கு வந்தால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகளில் மாட்டிக் கொள்ளுவோம் என்பதால் இவர்கள் நிரந்தரமாக சிண்டிகேட் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். கவர்னர் பிரதிநிதி, தாழ்த்தப்பட்ட சமுதாய பிரதிநிதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதிகள் 4 பேர் என மொத்தம் 7 பேரும், சுயநிதி கல்லூரிகளின் பிரதிநிதிகள் 9 பேர் மட்டுமே சிண்டிகேட் கூட்டத்திற்கு வருவதால் சுயநிதி கல்லூரிகளில் கையே ஓங்கி இருக்கிறது. இதுவே பல்கலைகழகத் தவறுகளுக்கு உடந்தையாகவும் ஆகி விடுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க