வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (12/01/2018)

கடைசி தொடர்பு:20:49 (12/01/2018)

கோவை விமான நிலையத்தில் உறி அடித்து உற்சாகப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கோவை விமான நிலையம் வந்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு உறி அடித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி

பொங்கல் விழா கொண்டாட்டத்திற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம், சென்னையில் இருந்து இன்று மாலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு, நாதஸ்வரம் , மேளதாளம் முழங்க உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். சிவகாசி பட்டாசு தொழில் பிரச்னை தொடர்பாக, சட்டமன்றத்தில் முழுமையாக  பேசியுள்ளேன். மேலும் இந்த பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு தமிழக அரசு இந்த  வழக்கை நடத்தி, பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்" என்றார். பேட்டியின்போது, டி.டி.வி.தினகரன் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியபோது, பொங்கல் விழா தருணத்தில் நல்லவர்கள் பற்றி, நல்லதை பற்றி மட்டும்  சிந்திப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில்  கலந்து கொண்ட முதல்வர், குத்துவிளக்கு ஏற்றினார். மேலும், அங்கு ஏற்பாடு செய்து இருந்த உறி அடிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உறி அடித்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்