பார்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர் கைது! ரூ.8.34 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை நகரில் இன்று இரவு டாஸ்மாக் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 8,34,500 பணம் கைப்பற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருப்பவர் மதிசெல்வம். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கடந்த சில வாரங்களாக மாவட்டம் முழுக்க பார்களில் கடுமையான பணவசூல் நடந்து வருவதாக புகார் எழுந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,  பண வசூலில் டாஸ்மாக் அதிகாரிகள் களம் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் மதி செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரி, "பர்மிட் முடிந்த பார்களை நடத்தும் உரிமையாளர்களிடம் பர்மிட்டை புதுப்பிக்க கட்டவேண்டிய பணத்தை எங்களுக்கு கொடுத்துட்டு. நீங்கள் பாரை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி, தனது சிப்பந்திகள் மூலம் பணத்தை வசூல் செய்திருக்கிறார் மதி செல்வம். இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்த நாளிலிருந்து மதிசெல்வத்தை கண்காணிக்கத் தொடங்கினோம். அவருக்குக் கீழே வேலைப் பார்க்கும் சிப்பந்திகள் பணத்தை வசூல் செய்து, இவர் தங்கி இருந்த லாட்ஜில் கொண்டுவந்து கொடுப்பது தெரியவந்தது. அப்படி சேர்ந்த தொகை ரூ.8,34,500 உடன் பொங்கல் விடுமுறைக்காகக் காரில் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் தங்கி இருந்த லாட்ஜில் வைத்து, பணத்துடன் அவரைக் கைது செய்தோம்"என்றார். கைது செய்யப்பட்ட மதிசெல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!