வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (13/01/2018)

கடைசி தொடர்பு:00:30 (13/01/2018)

பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்பு: கோவளத்தில் ஆர்ப்பாட்டம்!

கோவளத்தில் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்று திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். 

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதியில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மீனவ மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தது. அனைத்து அரசியல் கட்சியினரும் அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அமைச்சராகப் பொறுபேற்ற பொன்.ராதாகிருஷ்ணன் இந்தத் திட்டத்தை இனையம் பகுதியில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்தார். 

மத்திய அரசின் முயற்சியால் 28,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்ட நிலையில், இது தாங்கள் கோரிய துறைமுகத் திட்டம் அல்ல என்றும், பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை மத்திய அரசு அமைக்க முயற்சிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்தத் திட்டத்துக்காக இனையம் பகுதியில் கடலுக்குள் பல்வேறு கட்டடங்கள் எழுப்பப்பட இருப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் ரயில்வேத் திட்டங்களை அமைக்க வேண்டியதிருப்பதால் குடியிருப்புக்களுக்கு பாதிப்பு உருவாகும் என தேங்காப்பட்டணம் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதனால் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சார்பாக பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இந்தத் திட்டத்தை கன்னியாகுமரி மற்றும் கீழமணக்குடி இடையே கோவளம் கடலோரப் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கின்றன. 

பொதுமக்கள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவளத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அகஸ்தீஸ்வரம், தானுமலையான் புத்தன்தோப்பு, நெல்லித்தோட்டம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட உள்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இதில் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு எதிரான மக்கள் அமைப்பு என்கிற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பினர் இதனை வழிநடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 3000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.