ஆண்டாள் பஜனை பாடி கோவில்பட்டியில் வைரமுத்துவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆண்டாளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோரைக்  கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தினமணி நாளிதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட பாடல் ஆசிரியரும், கவிஞருமான வைரமுத்துவும், அந்நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசிய சில கருத்துக்கள் இந்துக்கள் புண்படும் படியாக உள்ளது என சர்ச்சை எழுந்தது. அவரின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து, இந்து அமைப்புகள் வைரமுத்துவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பயணியர் விடுதி முன்பு பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, வைரமுத்துவுக்கும், வைத்தியநாதனுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு அனுமதி பெறாததால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. 

போலீஸாரைக் கண்டித்து இந்து அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின் ஊர்வலமாகச் செல்ல போலீஸார் அனுமதி வழங்கியதால், சாலைமறியல் கைவிடப்பட்டது.  பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வைரமுத்து, வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் கொடுத்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் அமர்ந்து ஆண்டாள் பஜனை பாடியும் பெண்கள் கோலாட்டம் ஆடவும் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!