வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:02:00 (13/01/2018)

நபிகள் நாயகத்தை அவமதிப்பதா? -ஹெச்.ராஜாவைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகத்தையும் அவரது குடும்பத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் கருத்துத் தெரிவித்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

இந்துக்கள் புனிதமாகக் கருதி வழிபடும் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வைரமுத்து கருத்துக்குப் பதிலளித்த பா.ஜ-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, இஸ்லாமிய மக்கள் பெரிதும் நேசிக்கும் நபிகள் நாயகம் பற்றியும் அவரது குடும்பத்தைக் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் சுபைர் அஹ்மது தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர்கள் யூசுப் அலி, செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினரான ஷம்சுல்லுஹா ரஹ்மானி கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய சம்சுல்லுஹா ரஹமானி, ’வைரமுத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஹெச்.ராஜா, திட்டமிட்டே நபிகள் நாயகத்தையும் அவரது குடும்பத்தையும் அவமரியாதையாகப் பேசி இருக்கிறார். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நபிகள் நாயகத்தைத் தவறாகப் பேசியதுடன்,  இந்து சகோதர்களிடம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தூண்டிவிட்டுள்ளார். 

தவ்ஹீத் ஜமாஅத்

அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சன்களாகவும் பழகக் கூடிய இந்து முஸ்லீம் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஹெச்.ராஜா செயல்பட்டு வருவது அவரது பேச்சின் மூலம் அம்பலமாகி இருக்கிறது. அதனால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். மதவாதத்தை தூண்டி குளிர்காய நினைக்கும் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்’’ எனப் பேசினார். பின்னர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.