வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:06:00 (13/01/2018)

`திட்டமிட்டே செய்கிறார்!' - ஹெச்.ராஜாவுக்கு சி.பி.எம் கண்டனம்

பி.ஜே.பி. நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருகிறார் எனக் கூறி சி.பி.எம்-ன் மாநில செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எம் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

சிபிஐஎம் கண்டனம்

அதில் பல தீர்மானஙகள் இயற்றப்பட்டது. அதில், "வைரமுத்துவின் கட்டுரையை முன்வைத்து பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்  ராஜா,  வைரமுத்துவையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்ததோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார். மிகக் கடுமையான முறையில் தனி நபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான ஹெச்.ராஜாவின் பேச்சை கண்டிக்கிறோம்.

இதற்கு முன்னரும் ஹெச்.ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற பல பேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலைவெறி மிரட்டல்களும் அத்துமீறி தொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன் வெளிப்பாடேயாகும். இதைக் கண்டிப்பதோடு, தமிழக அரசு  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க