வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:11:13 (13/01/2018)

`மக்களுக்காகவே செயற்கைக்கோள்களை அனுப்புகிறோம்' - இஸ்ரோ அதிகாரி தகவல்

"நம் நாட்டு மக்களுக்கு சேவையாற்றவே செயற்கைக்கோள்களை அனுப்புகிறோம்" என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் மகேந்திரகிரி இஸ்ரோ திரவ எரிபொருள் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பாண்டியன்.

இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் பொறுப்பேற்றுள்ளதை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், இஸ்ரோ சார்பாக 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி- சி40 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

மக்களுக்காக

செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் நம் விஞ்ஞானிகள் பெரும் சாதனை புரிந்துவரும் நிலையில், ராக்கெட்டுகளுக்கான எரிபொருள் உருவாக்கிக் கொடுக்கும் பணியை நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பங்களித்து வருகிறது.

நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை அனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகேந்திரகிரி  இஸ்ரோவின் திரவ எரிபொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் பாண்டியன் விமானம் மூலம் மதுரை வந்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, `இஸ்ரோவால் தற்போது அனுப்பப்பட்டுள்ள ராக்கெட்டில் ஆறு நாடுகளின் சாட்டிலைட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டது. நம்முடையது இதில் மூன்று. கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்களை சுமந்து சரியான இலக்கில் பி.எஸ்.எல்.வி- சி40 பயணிக்கிறது. ஏவுகணை மிகச் சிறப்பாக அதன் பணியைச் செய்து வருகிறது. இது நாட்டின் தகவல்தொடர்பு வசதியை மேம்படுத்தவும் பூமியிலுள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யவும் நகரங்களின் திட்டமிடலுக்கும் இது பயன்படும். மற்ற நாடுகள் செயற்கைக்கோள் அனுப்ப நம்மைத் தேடி வருவதற்கு காரணம், நாம் ப்ளெக்‌ஸிபலாக இருப்பதும், குறைந்த நாளில், குறைந்த செலவில் அனுப்புவதாலும்தான். பிப்ரவரி இறுதியில் இன்னும் சில ராக்கெட்டுகள் விடப்போகிறோம். சந்திராயன் செலுத்துவதற்கு பணிகள் நடைபெற்றுவருகிறது. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் ராக்கெட் அனுப்புவதற்கு பங்களிப்புகளை செய்துவருகின்றன. ஸ்ரீஹரிகோட்டாவிலிருக்கும் இரண்டு ஏவுதளத்தை சரியாக பயன்படுத்தினாலே போதும். இனி ராக்கெட் அனுப்புவதை அதிகப்படுத்தப் போகிறோம். மாணவர்களின் வின்வெளி மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிக்கு இஸ்ரோவில் வாய்ப்பளிக்கிறோம். மகேந்திரகிரியில் நாங்கள் நாட்டுக்காக என்ன மாதிரியான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. இனி ஊடகங்களை அழைத்து வெளிப்படுத்த உள்ளோம். நாம் எப்போதும் மற்ற நாடுகளுக்கு போட்டியாக செயற்கைக்கோள்களை உருவாக்கவில்லை. நம் மீனவர்கள், விவசாயிகள், வீட்டில் டிவி பார்ப்பவர்கள், மக்களின் தொலைத்தொடர்பு வசதிக்காகவே எங்களுடைய ஆய்வுகள் தொடர்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க