வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (13/01/2018)

கடைசி தொடர்பு:10:36 (13/01/2018)

`ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத கட்சி அது!' - விளாசிய திருமுருகன் காந்தி

பெண்கள் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு, இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் கை வைப்பதாகக் கூறி அனைத்து இஸ்லாமிய ஜாமஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடத்தப்பட்டது.

மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். மே -17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான தன் முழக்கங்களை முன்வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், `பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலங்களில்கூட இஸ்லாமிய மக்களின் மீது வன்முறையைத் தூண்டிய கட்சியாக விளங்கியிருக்கிறது. தற்போது, இஸ்லாமியர்களின் மீது மிகக் கொடூரமான வன்முறையை ஏவுகின்ற ஆளும் மத்திய அரசாக பா.ஜ.க அரசு இயங்கிவருகிறது.

இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கைவைக்கும் போக்கை கடைப்பிடித்து வரும் ஜனநாயக விரோத பாஸிச பா.ஜ.க அரசு, தற்போது இஸ்லாமிய பெண்களுக்கு நல்லதைச் செய்வது போன்றதொரு பொய்யான பரப்புரையை மக்களிடத்தில் மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கும் மத்திய அரசை, இங்குள்ள முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் கடுமையாக கண்டித்துவருகின்றன. இத்தனை ஆண்டு காலமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத உச்ச நீதிமன்றம், இன்றைக்கு முத்தலாக் விவகாரத்தை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாகக் கையிலெடுக்க வேண்டும்.

​​​

மத்திய பா.ஜ.க அரசு தமிழர்கள் மீதும், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதும் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் ஹெச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்தக் கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் பா.ஜ.க மிக கீழ்த்தரமான கட்சி என்பது, பொதுமக்கள் முன்பாக அம்பலமாகியுள்ளது. இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டுள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குப் பெற்ற இக்கட்சி, நாட்டின் அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கிறது. ஆனால், அத்தகைய ஆதிக்கத்தை தமிழகத்தில் அவர்களால் பெறமுடியாத அளவுக்கு பா.ஜ.கவை தமிழகம் எதிர்க்கும்' என்றார் கொதிப்புடன்.