வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (13/01/2018)

கடைசி தொடர்பு:10:32 (13/01/2018)

8 லட்சம் ரூபாய்க்கு கணக்குக் காட்டமுடியாமல் திணறிய டாஸ்மாக் மேலாளர்! - கிடுக்குப்பிடி போட்ட ஊழல் தடுப்பு போலீஸ்

புதுக்கோட்டை நகரில் நேற்று இரவு ஏழு மணிக்கு டாஸ்மாக்  மாவட்ட மேலாளரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ரூபாய் 8,34,500 பணம் கைப்பற்றினார்கள். அவரிடமும் அவருடன் பணியாற்றும் சூப்பர்வைசர்கள் மதிவாணன், முருகேசன் ஆகியோரிடமும் மூன்று மணி நேரம் விசாரணை செய்தார்கள். இரவு 10.30 மணிக்கு மேல் அவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அனுப்பிவிட்டார்கள்.

tasmac
 

இது குறித்து  அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன...

மதிசெல்வனும் அவருடைய சிப்பந்திகளும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்ட செய்தியை அறிந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் வெடி போடாதக் குறையாகக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். காரணம், மதிசெல்வனின் பண ஆசைதான். குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்குமாறு கூறுவாராம். ஆஃப் பாட்டிலுக்கு ரூபாய் பதினைந்து கூடுதல். அந்தப் பணத்தை தனியே தனக்கென்று எடுத்துக்கொள்வாராம். இதை வசூல் செய்து வரும் வேலையை சூப்பர்வைசர்கள் மதிவாணனும் முருகேசனும் பார்த்திருக்கிறார்கள்.

இது தவிர,பணம் கொட்டும் அட்சயப் பாத்திரமாக பார்கள் இருந்திருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிற பார்களில் பெரும்பாலானவை அரசின் அனுமதி பெறாமல்தான் இயங்கி வருகின்றன. அப்படியான பார்களின் உரிமையாளர்களிடமிருந்து மாதாமாதம் 'லம்சமாக' மாமுலை வசூல் செய்திருக்கிறார்கள். இதுதவிர, பண்டிகைக்கால வசூல் என்று தனியாக ஆவர்த்தனம் ஆடி இருக்கிறார்கள். இப்போதும் கூட, பொங்கல் நெருங்கி வரும் வேளையில் பண வசூலில் இவர்கள் தாறுமாறாக இறங்கியதாகவும் அதில் ரொம்பவே பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர் ஒருவர் மிகத் தெளிவாக, ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் போட்டுக்கொடுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மதிசெல்வன்குறித்து ஏற்கெனவே புகார்கள் வந்திருந்ததன் அடிப்படையில்,லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரையும் சூப்பர்வைசர்களையும் கண்காணித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பெரும்தொகையுடன் மதிசெல்வன் பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் செல்ல இருப்பதாக உறுதியான தகவல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையிலான பத்து பேர் கொண்ட டீம் ஸ்கெட்ச் போட்டு மூன்று பேரையும் வளைத்துப் பிடித்தது.


இதுகுறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.எஸ்.பி ரகுபதியிடம் பேசினோம். " மதிசெல்வன் பெரும் பணத்துடன் ஊருக்குப் புறப்பட்டுச் செல்வதாகவும் அவரிடம் இருப்பது கணக்கில் வராத, சட்டத்துக்குப் புறம்பான முறையில் வசூலிக்கப்பட்ட பணம் என்றும் எங்களுக்கு உறுதியானத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரையும் மற்ற இருவரையும் கண்காணித்து வளைத்துப் பிடித்தோம். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 8,34,500 பணத்தை பறிமுதல் செய்தோம். மூன்றுமணி நேரம் மதிசெல்வனிடம் விசாரித்தபோதும் அவர் பணத்துக்கான கணக்கைக் காட்டமுடியவில்லை. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்துவிடுவோம் அவர் அங்கு கணக்குக் காட்டவேண்டும். எங்கள் விசாரணை முடிந்ததும் மூவரையும் அனுப்பி விட்டோம். அவர்களை கைது செய்யும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது" என்றார்.