வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (13/01/2018)

கடைசி தொடர்பு:10:45 (13/01/2018)

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி! - அச்சத்தில் கிராம மக்கள்


சமீபகாலமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பற்றிய புகார்கள் அதிக அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. முதலில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்து, எந்த நடவடிக்கையும் இல்லாதப் பட்சத்தில் புகார்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குப் படை எடுக்கிறார்கள்.


ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வரும் மனுக்களில் இரண்டு விஷயங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. ஒன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வரும் மனுக்கள். அடுத்ததாக, அபாயகரமாக தங்கள் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றுவதுகுறித்த மனுக்கள். 


மாவட்டம் முழுக்க பல்வேறு கிராமங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதும் அப்படியான குடிநீர் தொட்டிகள் பெரும்பாலும் ஊரில் உள்ள பள்ளிகளின் வளாகத்தில் அமைந்திருப்பதுமே மக்களின் பயத்துக்கும் படபடப்புக்கும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. அப்படி ஒரு கோரிக்கை இப்போது விராலிமலை பகுதியிலிருந்து வந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள  செங்களாக்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் கிராம ஊராட்சி சேவை மையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கிறது. அதன் முகப்பை ஒட்டிய பகுதியில், இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  ஒன்று இருக்கிறது. அதைதான் அப்புறப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். "தூண்களும், தொட்டியின் கீழ்பகுதியும் பெயர்ந்து விழுந்துவிட்ட நிலையில் இருக்கிறது. ஆனாலும், தினமும் இத்தொட்டியில் நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர்  ஏற்றப்பட்டுவருகிறது. 

இதனால் பாரம் தாங்காமல் எந்நேரமும் இடிந்துவிழுந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இதை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என்று கேட்டு நடையாக நடக்கிறோம். ஆனால், காரியம் ஒன்றும் நடக்கவில்லை. சின்னப்பிள்ளை தொட்டிப்பக்கம் போய் விளையாடாமல் இருக்க கருவேல முள்ளுமரத்தை வெட்டி, சுற்றிலும் போட இருக்கோம். அதிகாரிகள் இவ்வளவு அலட்சியம் காட்டினால் நாங்கள் என்னதான் செய்வது" என்று கொதிக்கிறார்கள் செங்களாக்குடி கிராம மக்கள்.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம்."மாவட்டத்தில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி, நூலகக் கட்டடங்கள் போன்றவற்றை ஆய்வுசெய்து கணக்கு எடுக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. அந்தக் கணக்கெடுப்பில் அபாயகரமான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பற்றியும் சேர்த்து இருக்கிறோம். விரைவில் பழைய தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய தொட்டிகளை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்றார்கள்.