வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (13/01/2018)

கடைசி தொடர்பு:11:24 (13/01/2018)

வைரமுத்து தனி மனிதரல்ல.. தமிழர்களின் சொத்து! - மிரட்டுவோருக்கு வைகோ எச்சரிக்கை

வைகோ

கவிஞர் வைரமுத்து தனிமனிதரல்ல, அவர் தமிழர்களின் சொத்து. அதனால் அவரை மிரட்டலாம் என்றோ ஊறு விளைவிக்க நினைக்கலாம் என்றோ எவரும் கனவு காண வேண்டாம் என வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

வைரமுத்துஇந்துக்களின் மனம் புண்படும் வகையில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியதாக கவிஞர் வைரமுத்துமீது விமர்சனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்ததுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், வைரமுத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’’நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களைத் தந்த படைப்பாளி கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்திரித்தவையாகும். 

நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும். தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும். வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணி தான் வைரமுத்து. அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கியப் பணி நன்றிக்குரியது. 

வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாள் அவர்களையும் அவர் தந்த பாடல்களையும் மிக உன்னதமாகச் சித்திரித்துள்ளார். ‘மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள்’ என்று தலைப்பிட்டு எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்துகுறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் ‘தினமணி’ நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும். ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், ‘தினமணி’ நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்துக்குரியது. தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம்’’ என வைகோ குறிப்பிட்டுள்ளார்.