வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (13/01/2018)

கடைசி தொடர்பு:12:19 (13/01/2018)

சேலத்தில் விமான நிலையத்துக்கு இணையான பஸ்போர்ட்! - முதல்வரின் அடடே அறிவிப்பு

நேற்று இரவு சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை சந்திப்பில் 21.97 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோஹிணி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''வளர்ந்து வரும் சேலம் மாநகரில் அடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு முதலமைச்சராக அம்மா இருந்தபோது சேலம் ஐந்துரோடு சாலை, குரங்குசாவடி, திருவாக்கவுண்டனூர், செவ்வாய்ப்பேட்டை, முள்ளுவாடி மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு அம்மா அனுமதி அளித்தார்.

வேறு எந்த ஆட்சியிலும் சேலம் மாவட்டத்துக்கு இந்த அளவுக்கு திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. சேலம் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக மல்லூரில் இருந்து அரபிக் கல்லூரி வரை 21 கி.மீட்டர் தூரத்துக்குப் புதிய புறவழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தபோது உடனே அதற்கு அனுமதி அளித்தார்.

விமான நிலையத்துக்கு இணையாக அனைத்து வசதிகள்கொண்ட அதி நவீன பஸ்போர்ட் அமைக்கவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார். சேலம், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிநவீன பேருந்து நிலையங்கள் மிக விரைவில் செயல்படுத்தப்படும். இதற்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க