வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (13/01/2018)

கடைசி தொடர்பு:14:25 (13/01/2018)

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் களைகட்டும் ஆடு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. ஆடு விற்பனையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நல்ல வருமானம் கிடைத்துள்ளதால், ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

sheep selling in ettayapuram sheep market

தென் மாவட்டங்களில் உள்ள ஆட்டுச் சந்தைகளில் மிகவும் சிறப்பு பெற்றது தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை. இங்கு விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமின்றி விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால், ஆட்டுவியாபாரிகள் இங்கு கூடுவார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இந்தச் சந்தை நடைபெறுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், கடம்பூர், எட்டயபுரம், எப்போதும் வென்றான், கழுகுமலை ஆகிய பகுதிகளில் ஆடு வளர்ப்பதை மானாவாரி விவசாயிகள் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதுதவிர, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வருகிறது. 

sheep sellin in ettayapuram sheep market

தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளை விடவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இச்சந்தையில் ஆடுகள் விற்பனை  கூடுதலாக நடைபெறும். கடந்த ஆண்டு வறட்சி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக ஆடுகள் விற்பனை குறைவாக இருந்தது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால்  சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. 

sheep sellingt in ettayapuram sheep market

மதுரையைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி சந்திரனிடம் பேசினோம், “திருமங்கலம், அருப்புக்கோட்டை சந்தையில கிடைக்காத ஆடு இனங்களைக்கூட இந்த சந்தையில வாங்கியிருக்கேன். விற்பனையும் செய்திருக்கேன். இந்த முறை ஆடுகள் வரத்து அதிகமா இருக்குது.  நாட்டு இனங்களான கன்னி ஆடுகள், கொடி ஆடுகளில் கரும்போர், சிவலைப்போர் ஆகிய இரண்டு வகைகளின் வரத்தும் அதிகமா இருக்கு. அதோட செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், பட்டிணம் ஆடு, கச்சகட்டி ஆடு,  ராமநாதபுரம் வெள்ளை, மேச்சேரி ஆகிய செம்மறி ஆட்டு இனங்களின் வரத்தும் அதிகம் இருக்கு. இந்த ஆண்டு திருச்சி கறுப்பு, கோயமுத்தூர் குரும்பை ஆகிய செம்மறி ஆடு இனங்களும் புதுவரவா விற்பனைக்கு வந்திருக்கு. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டு விற்பனையில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு நல்ல வருமானம்  கிடைச்சிருக்கு” என சந்தோஷம் பொங்கச் சொன்னார்.   

sheep selling in ettayapuram sheep market 

 கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இச்சந்தையில் ஆட்டு விற்பனை ரூ.3 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூ.6 கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளதால் ஆட்டு வியாபாரிகள், ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க