வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:15:23 (13/01/2018)

மூன்று ஆண்டுகளில் காவிரியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள்! - முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் கடந்த 2013-ம் வெளியிட்டதை நினைவுகூரும் வகையில் மேட்டூர் அணை பூங்கா முன்பு ஒரு கோடி மதிப்பிலான நினைவுத் தூண் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தத் தூணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.


அப்போது  பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலனுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் ஜெயலலிதா. காவிரி நதிநீர் பங்கீட்டில் மிகுந்த சட்டப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தது தன் வாழ்நாள் சாதனை என்று ஜெயலலிதா கூறினார்.


இதற்காக தஞ்சையில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய ஜெயலலிதா தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பிரமாண்ட வெற்றியாக இதைக் கருதுவதாகவும், இதை தன்னுடைய வெற்றியாக மட்டுமே கருதாமல் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக நினைப்பதாகவும், வெற்றியை நினைவுகூரும் வகையில் ரூ 1 கோடி மதிப்பில் மேட்டூர் அணை முன்பு நினைவுத் தூண் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.

அம்மாவின் அறிவிப்பின்படி இன்றைய தினம் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு நினைவுத் தூண் மேட்டூரில்  திறக்கப்பட்டுள்ளது. நானும் ஒரு விவசாயி என்ற அடிப்படையில், இந்த நினைவுத் தூணை திறந்துவைக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு ஜெயலலிதாவுக்கும் இறைவனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேட்டூர் அணையின் மூலம் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் 16 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையின் 83 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக வண்டல் மண் எடுக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 2.09 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று குடிமராமத்து எனும் திட்டம் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக 1519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக 2065 ஏரிகள் தூர் வார ரூ 331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான தண்ணீரை ஒரு சொட்டுகூட வீணாகாமல் தடுக்கும் வகையில், மூன்று ஆண்டுகளில் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும். நடப்பாண்டில் இதற்கென 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரும் தடையின்றி கிடைக்கும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க