133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம்! - உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியில் சிற்பிகள் | 133 Feet Thiruvalluvar sand sculpture in Mamallapuram Beach

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (13/01/2018)

கடைசி தொடர்பு:15:35 (13/01/2018)

133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம்! - உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் முயற்சியில் சிற்பிகள்

தமிழர் திருநாளான தை முதல் நாளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவது வழக்கம். திருவள்ளுவர் தினத்தையும் மல்லை சிற்பிகளின் கலைத்திறனையும் உலகளவில் பெருமைகொள்ளச் செய்யும் முயற்சியாக, மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் எழுப்பி வருகின்றனர் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்.

மாமல்லபுரம் திருவள்ளுவர் மணல் சிற்பம்

மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் மணல் சிற்ப வேலைப்பாடுகளில் தீவிரமாக இருந்த சிற்பி கீர்த்திவர்மனிடம் பேசினோம், “திருவள்ளுவர் தினத்தன்று 10 அடியில் செய்துவைத்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, சர்க்கரை பொங்கல் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கம்போல் திருவள்ளுவர் தினம் கொண்டாடாமல், உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்க திட்டமிட்டோம். இதற்காக 133 அடியில் மணல் சிற்பம் செய்ய முடிவெடுத்தோம். மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி மாணவர்களும் மல்லை தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை செய்துவருகிறோம். பேராசிரியர் ராஜேந்திரன் தலைமையில் சிற்பக்கல்லூரியில் படிக்கும் சுமார் 100 மாணவர்கள் இரவு பகலாக எங்களுடன் பணியாற்றிவருகிறார்கள். இந்தியாவில் 100 அடிக்கு மேல் பெரியஅளவில் மணல் சிற்பம் செய்தது கிடையாது.

மாமல்லபுரம் திருவள்ளுவர் மணல் சிற்பம்

பொங்கல் விடுமுறையில் சுமார் இரண்டு லட்சம் சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரம் பகுதிக்கு வருகிறார்கள். அதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.  வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆங்கிலத்திலும், தமிழர்களுக்கு தமிழிலும் திருக்குறள் புத்தகங்களை கொடுக்க உள்ளோம். நீண்ட கடற்பரப்பு கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், இங்கு பெரிய அளவில் யாரும் மணல் சிற்பங்களைச் செய்வதில்லை. சிறிய கடற்பகுதியைக் கொண்டுள்ள ஒடிசா, மணல் சிற்பம் செய்வதில் பிரபலம் அடைந்துள்ளது. மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான சிற்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் மணல் சிற்ப போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்துவருகிறோம். ஆனால், அது பெரிய அளவில் அறியப்படுவதில்லை. தமிழக சிற்ப கலைஞர்களாலும் மணல் சிற்பம் செய்ய முடியும் என்பதை இதன் மூலம் உலகுக்கு நிரூபிக்க உள்ளோம்.

திருவள்ளுவர் மணல் சிற்பம் மாமல்லபுரம்

கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு கல்லில் சிலை செய்திருக்கிறார்கள். அதில் பீடத்தின் 53 அடியைக் கழித்துவிட்டால், வெறும் 80 அடியில் மட்டுமே திருவள்ளுவர் சிலை இருக்கிறது. தற்போது நாங்கள் உருவாக்கிவரும் மணல் சிற்பம் 133 அடி என்பதால், திருவள்ளுவருக்கு 133 அடி சிலை என்பது இதுதான் முதல்முறை. இதற்காக கடற்கரையில் இருக்கும் சுமார் 100 டன் மணலைப் பயன்படுத்தி இரவு பகலாக செய்துவருகிறோம். சுற்றுச் சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக எவ்வித வண்ணப் பொடியும் கலக்கப்போவதில்லை.” என்கிறார்.

மாமல்லபுரம் வருபவர்கள் கண்களுக்கு கலைவிருந்து காத்திருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close