சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாகவும், சேலத்தின் நிழல் முதல்வராகவும் இருந்து வருபவர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவரும் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான பெத்தநாயக்கன் பாளையம் இளங்கோவன். வரும் 23-ம் தேதி வருமான வரித்துறையில் ஆஜராக இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது சேலம் அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள். அப்போது  கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பயிர்க்கடன் கொடுப்பதற்காகவும் நபார்ட் வங்கி மூலம் தமிழகக் கூட்டுறவு வங்கிக்கு 79.25 கோடி ரூபாய் பணம் வந்தது. அதில் பெரும் தொகை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.

அதையடுத்து, தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே நாளில் சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கியிலும், அதன் தலைவராக இருக்கும் இளங்கோவனின் அறை மற்றும் அவருடைய அலுவலகங்களிலும்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனை மூலம் பல ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள்.

“இந்தச் சோதனை எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கும் டார்கெட். அடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம்” என சேலம் மக்கள் வெளிப்படையாகவே பேசி வந்தார்கள். பிறகு சோதனை தொடரப்படவில்லை. அதே நேரத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று இளங்கோவனுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். அதில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இதனால், எடப்பாடி தரப்பிலும், சேலம் அ.தி.மு.க. தரப்பிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!