வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:17:00 (13/01/2018)

ஆயிரக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கக் காரணமான அமுதாவின் வாழ்க்கை பற்றி தெரியுமா?

"டவுள் சில நேரம், தேவதைகளை மண்ணுக்கு ஏதோ சில காரணங்களுக்காக அனுப்பிவைப்பார். அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்குக்காக வந்து, மனிதகுல நன்மைக்காக வாழ்ந்துவிட்டு போவார்கள். அப்படிப்பட்ட ஓர் தேவதைதான் அமுதா" என்று கண்கள் பனிக்க தன் சகோதரியைப்பற்றி கூறுகிறார் மகேந்திரன்

தனக்குப்போகத்தான், தானமும், தர்மமும் என்று ஓர் பழமொழி உண்டு. அதன்படியே, பலர் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் எத்தனையோ நற்பணிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், வாழ்க்கையில் ஒரு நாள்கூட மகிழ்ச்சியையோ, பலனையோ அடையாமல் ஆயிரக்கணக்கானோரை வாழ வைத்தவர்தான் கோவையைச் சேர்ந்த அமுதா.

அமுதா

 

அமுதா… வயது 52 . இரண்டு சகோதரர், இரண்டு சகோதரிகள். நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிறந்த நாள் முதல் வாழ்வில் இவர் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே இல்லை. பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால், வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். போதிய மருத்துவ வசதி இல்லாததால், இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை.  இதனால், தொடக்கப்பள்ளியையே அவரால் தொடர முடியவில்லை.

பள்ளி படிப்பு இல்லை என்றாலும், வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். இதனிடையே, சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து, அவர்கள் வாழ்வுக்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்துகொடுத்தனர்.

ஆனால், மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். இந்த சந்தோஷமும் நீடிக்கவில்லை. அமுதாவின் பெண்குழந்தையும் பூச்சிக்கடி காரணமாக உயிரிழந்துவிட்டது. அவரது கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்டார். அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிப்பால்,  மன அழுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டார் அமுதா. ஒரு கட்டத்தில், தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார்.

அதன் பின்னர்,  அமுதாவின் பெற்றோர் செல்லாத மருத்துவமனை இல்லை; வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை. அமுதா தனது, வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் சென்றது இல்லை. அவருக்கு தெரிந்தது, எல்லாம் மருத்துவமனை... மருத்துவமனை மட்டுமே. இந்நிலையில், 2015-ம் ஆண்டு, மருத்துவர்களும் அவரை முற்றிலும் கைவிட்டு விட்டனர்.

வீதியில் விட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தைப் பிரிந்து, பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார். அமுதாவின் நிலையைப் பார்த்து, இவரைப் போல உலகில் இனி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், அவரது சகோதர, சகோதரிகளால் ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அமுதாவைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் இந்த அறக்கட்டளை மூலமாக மறுவாழ்வு பெற்று வருகின்றனர். ஆனால், அதற்கு காரணமாக அமுதா தற்போது நம்மிடம் இல்லை. மாரடைப்பு காரணமாக, கடந்த வாரம் அமுதா உயிரிழந்துவிட்டார்.

அமுதாவின் சகோதரர் மகேந்திரன் கூறுகையில், "அமுதாவைச் சந்திப்பவர்கள் எல்லோரும் அவர் பாவப்பட்ட பிறவி, வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவித்தது இல்லை. எப்போது இறைவன் அழைத்துச் செல்லப் போகிறான், இவரால் யாருக்கும் பிரியோஜனம் இல்லை என்று புலம்பித் தள்ளிக்கொண்டு இருந்தனர். ஆனால், அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்குத் தெரியாது. அவரைப் போன்றவர்களை யாரும் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது.

அமுதா

அமுதாவைப் போன்ற, மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர், தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள், இதன்மூலம் குணமாகி மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை நல்லடக்கம் செய்வது, ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் வழங்குவது, எங்களது காப்பகத்தில் உள்ள 150 பேருக்கு ஆதரவு என இந்த செயல்கள் அனைத்துக்கும் பின்னணி அமுதா என்ற இந்த தேவதை தான்.

கடவுள் சில நேரம், தேவதைகளை மண்ணுக்கு ஏதோ சில காரணங்களுக்காக அனுப்பிவைப்பார். அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்குக்காக வந்து, மனிதகுல நன்மைக்காக வாழ்ந்துவிட்டுப் போவார்கள். அப்படிப்பட்ட ஓர் தேவதைதான் அமுதா" என்று கண்கள் பனிக்க முடித்தார்.