வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (13/01/2018)

விசாரணை முடிய 15 ஆண்டுகள் ஆகும்! சசிகலா கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணையம் நிராகரித்தது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்துவருகின்றனர். அனைவரின் வாக்குமூலங்களும், பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சென்னை அப்போலோ மருத்துவமனையும் 2 சூட்கேஸ்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தது. சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி, ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. ஆனால், சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணையம், ’இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். அவர்களிடமெல்லாம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றால், விசாரணையை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும். விசாரணை ஆணையத்தில் இனி ஆஜராகி விளக்கமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்திக்கொள்ளலாம்’ என்று கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.