சாலை விதிகளை மீறினால் வீட்டுக்கே சம்மன்..! தூத்துக்குடி போலீஸார் கிடுக்கிப்பிடி

தூத்துக்குடியில்  சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளை காமிரா மூலம் கண்காணித்து, அவர்களின் வீட்டிற்கே சம்மன் அனுப்பும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை  விபத்துகளை குறைப்பதற்காக, மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.‛ஹெல்மெட்’ அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தல்,உரிய வயது இல்லாமல் வண்டி ஒட்டுபவர்களைக் கண்காணித்து தடுத்தல், வேகமாக வண்டி ஓட்டுபவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, எச்சரிக்கை, அறிவுரை வழங்குதல் போன்ற நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார்  ஈடுகின்றனர். அதேபோல், சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை, கேமிரா மூலம் கண்காணித்து, வண்டி எண்ணை வைத்து, அவர்கள் வீட்டிற்கே,‛சம்மன்’ அனுப்பும் திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த கேமிரா கட்டுபாட்டு அறையை துாத்துக்குடியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் துவக்கி வைத்தார். 

பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துாத்துக்குடியில், கடந்த 2017 ம் ஆண்டில், தலைக்கவசம் அணியாமல் விபத்தில் சிக்கி 127 நபர்களும் இந்த ஆண்டில் இதுவரை 6 பேரும் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.  தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிப்புக் கேமிரா மூலம் கண்காணித்து, அதில், விதி மீறுபவர்களின் வாகன எண்ணை வைத்து, வீட்டு முகவரிக்கே சம்மன் அனுப்பும் முறையை தீவிரப்படுத்தி உள்ளோம். இதற்காக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியலில் 250 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக இரு இடங்களிலும் இதற்கென ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் ஒரு காவலரின் பணிச் சுமை குறைக்கப்படுகிறது. அதிகமான விதிமீறில் வழக்குகளையும் ஒருவரால் பதிய முடியும். 

தூத்துக்குடியில் கடந்த 2017-ல், 34 ஆயிரத்து 518 மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதியப்பட்டு, அதன் மூலம் ரூ.63 லட்சத்து, 97 ஆயிரத்து,300  அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, 2016-ம் ஆண்டை விட 90.6 சதவிகிதம் அதிகம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!