மலேசியாவில் மாயமான ராமநாதபுரம் இளைஞர் நாடு திரும்பினார்..! பெற்றோர் மகிழ்ச்சி

ஊர் திரும்ப இருந்த நிலையில் மலேசியாவில் மாயமான ராமநாதபுரம் வாலிபர் 20 நாட்களுக்குப் பின் ஊர் திரும்பினார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

மலேசியாவில் காணாமல் போன ராமநாதபுரம் வாலிபர்


ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்சார் பீவி - தாஜுதீன் தம்பதியினரின் மகன் முகம்மது யாசீன். இவர் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலம் பட்டர்வொர்த்த் என்ற ஊரில் உள்ள பல்பொருள் அங்காடியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஆனந்தூரில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி விசா அனுமதியை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் இந்தியா திரும்ப இருந்தார்.

 விமான நிலையம் வருவதற்காக கடந்த 21-ம் பட்டர்வொர்த்திலிருந்து பேருந்தில் கிளம்பிய முகம்மது யாசீன் மறுநாள் காலை கோலாலம்பூர் வந்துவிட்டதாக தனது தாயாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. விமான நிலையத்திற்கும் வந்தததாக தகவல் இல்லை. இதனால் அவருடைய பெற்றோர் பதறிப்போனார்கள். மலேசியாவில் உள்ள அவர்களுடைய உறவினர்கள் மூலம் முகம்மது யாசீன் காணாமல் போனது குறித்து மலேசிய போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குல்சார் பீவி, தனது மகன் மலேசியாவில் காணாமல் போனது குறித்து மலேசிய போலீஸாரிடம் புகார் அளித்து 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை விவரம் எதுவும் தெரியவில்லை. எனவே, மகனை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய அரசு மூலமாக ஏற்பாடு செய்யவேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், யாசீன் இன்று ஆனந்தூர் திரும்பினார். யாசீன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப இருந்த நிலையில் கோலாலம்பூர் போலீஸார் அவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்று ஒரு வாரம் விசாரணை நடத்தியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த யாசீனின் உறவினர் நைனா முகம்மது போலீஸாரிடம் உரிய விளக்கம் அளித்து யாசீனை மீட்டு வந்துள்ளார். போலீஸாரிடம் இருந்து மீட்கப்பட்ட யாசீன் இன்று தனது சொந்த ஊரான ஆனந்தூருக்கு திரும்பினார். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!