வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (13/01/2018)

சேலத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு...! விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் மேட்டூர்  செல்லும் சாலையில் உள்ள மேச்சேரி மல்லிகுந்தத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றி முகத்தில் கறுப்பு ரிப்பனையும் தொங்க விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த மர்ம நபர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கும் நிலையில் மேலும் அசம்பாவிதம் ஏற்பாடாத வகையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி வி.சி.க மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு செயலாளர் பார்த்திபன், ''மேச்சேரி மல்லிகுந்தம் இந்த பகுதியில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களும் இருக்கின்றன. தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சாலை ஓரத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. சில மர்ம நபர்கள்  நேற்றிரவு சிலை மீது சிவப்பு சாயத்தையும், முகத்தில் கறுப்பு ரிப்பனையும் தொங்க விட்டுச் சென்று விட்டார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. காவல் துறை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் சாலை மறியலில் ஈடுபட்டோம்'' என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும், அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து மேட்டூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் (பொறுப்பு), மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றார்கள். தடவியல் நிபுணர் செந்தில்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அண்ணாமலை, சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடனே சம்பவ இடத்திற்கு வந்தார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸார் குவிக்கப்பட்டார்கள்.